Breaking News
கோவை: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
கோவை,
கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு 7-வது மலையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார்.
இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென்று சீதோஷ்ண நிலை மாறுவதால், ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சித்ரா பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் திடீரென்று பக்தர்கள் மலை மீது செல்ல வனத்துறை தடை விதித்தது. வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காரணம் கூறப்பட்டது.
இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல மே மாதம் முழுவதும் மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தும் பக்தர்கள் முறையிட்டனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு கடந்த 6-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மலை மீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்லக்கூடாது.
அத்துடன் மலை மீது ஏற்கனவே செல்லக்கூடிய பாதையில் மட்டும்தான் செல்ல வேண்டும். பாதை தவறி கும்பலுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வது, வனவிலங்குகளை சீண்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.