இலங்கையில் மக்கள் கொந்தளிப்பு; வெளிநாட்டிற்கு தப்பிச்செல்கிறாரா ராஜபக்சே?
கொழும்பு,
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில் பொலன்னருவாவை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா, போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது பாதுகாவலரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவர்கள் இருவரின் உடலும் பின்னர் மீட்கப்பட்டன. கொழும்பு உள்பட பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வன்முறை சம்பவங்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. அந்தவகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் மொத்த வீடும் தீயில் எரிந்து நாசமானது. இதைப்போல ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே வேறு ஒரு இல்லத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.