நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படுமா? – முதல்வருடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆலோசனை
கொறடா அறிவுறுத்தலை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானத் தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேர் வாக்களித்தனர். திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் என 97 உறுப்பினர்கள் அவையில் இல்லை. அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு எம்எல்ஏ அருண்குமார் பங்கேற்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம், பாண்டிய ராஜன் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே அவையில் பங்கேற்க வேண்டும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
ஒரு எம்எல்ஏ, கொறடா உத்தரவை மீறினால் அதுபற்றி பேரவைத் தலைவருக்கு பரிந் துரைத்து, சம்பந்தப்பட்ட நபரை தகுதி நீக்கம் செய்யலாம். அதன் படி, தற்போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், அவையில் பங்கேற்காதவர் என 12 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் ஆகி யோரை கட்சியை விட்டு நீக்குவ தாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஏற்கெனவே அறிவித்துள் ளார். மற்றவர்களை நீக்க வில்லை. அதே நேரத்தில் பொதுச் செயலாளராக சசிகலா பதவி வகிப் பதே செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. அது தொடர்பாக பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ், பாண்டிய ராஜனை கட்சியில் இருந்து நீக்கியது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அந்த உத்தரவு செல்லுமானால், கட்சி யில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பேரவையில் எக்கட்சியும் சாராதவர் களாக செயல்படுவார்கள். அத னால், அவர்கள் மீது அதிமுக கொறடா நடவடிக்கை எடுக்க முடியாது.
மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த கொறடா என்பதிலும் சிக்கல் உள்ளது. எடப்பாடி தரப்பில், ஜெயலலிதாவால் நியமிக் கப்பட்ட எஸ்.ராஜேந்திரன் கொறடா வாக உள்ளார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 11 எம்எல்ஏக்களுக்கும் கொறடாவாக செம்மலையை நியமித்து அதற்கான கடிதமும் பேரவைத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை கொறடா என பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கொறடா ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். முதல்வர் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர். கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 15 நாட்களுக்குள் பேரவைத் தலைவருக்கு கொறடா பரிந்துரைக்க வேண்டும். இதன் அடிப்படையில் எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு அதன் பேரில் அவர் நடவடிக்கை எடுப்பார்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்கினால், அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். தேர்தல் ஆணையத் தில் அதிமுக தொடர்பான மனுக்கள் நிலுவையில் உள்ளதால், சட்டப்படி இதையும் அதிமுக எதிர்கொள்ள வேண்டும். அந்த 12 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில் தேர்தலை எதிர்கொண்டால் எதிர்க் கட்சிகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கருத்து நிலவுவதால் அதற்கும் அதிமுக தயாராக இல்லை. எனவே, 12 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை தாமதமாகலாம் என்றே அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
நன்றி : தி இந்து தமிழ்