வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குடிநீர் பாட்டிலை வீசுவதை தடுக்க புதிய திட்டம்
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களால் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும், பூங்காவில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10-ஐ திரும்பபெறும் வைப்பு தொகையாக பெறப்பட்டு, பின் பயன்படுத்திய ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து வைப்பு தொகையான ரூ.10-ஐ திரும்ப பெற்று கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் “ஒரே ஒரு பூமி” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து “ஒரு நபர் ஒரு மரம்” என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டது. வெப்பமய மாதல், கால நிலை மாற்றம் தணிப்பு மற்றும் பூங்காவில் பசுமையான சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
உயிரியில் பூங்காவில் உள்ள 350 பணியாளர்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த மரக்கன்றுகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நட்டுள்ளனர். மேலும் அனைவரும் தாங்கள் நட்ட மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க உறுதி ஏற்றுக்கொண்டனர். மேலும் நிலையான மேலாண்மை நடை முறையை நோக்கி, பூங்காவில் இருக்கும் நீர்தொட்டிகளில் மீன் வளர்ப்பு முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முயற்சி பூங்காவிற்குள் இருக்கும் நீர் பறவைகள் மற்றும் முதலைகளின் அன்றாடமீன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.