Breaking News
100 அடியை நெருங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்.

ஈரோடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படும். தற்போது தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும்.

இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் அணைப்பகுதியை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். சிலர் அணையை சுற்றி பார்த்து ரசிப்பதுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.