825 காளைகள் சீறிப் பாய்ந்தன; 303 வீரர்கள் களமாடி அடக்கினர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர்: உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 825 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்குவதற்கு 303 வீரர்கள் களமிறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி தை முதல் நாளான ஜன.15ல் மதுரை அவனியாபுரம், நேற்று முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடந்தது. உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று மிகக் கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டை காலை 7.30 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, புகழேந்தி, சுந்தர்மோகன் ஆகியோரும் பார்வையிட்டனர். கால்நடைத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் குழு, காளைகளின் உடல் தகுதியை பரிசோதனை செய்தனர். சுகாதாரதுறை சார்பில் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாடுபிடி வீரர்களுக்கான உடல் தகுதியை முறையாக பரிசோதனை செய்து, அனுமதித்தனர்.
போலி ஆவணங்கள் தந்த 2 வீரர்கள், முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காத 11 பேர் உட்பட 22 பேர் பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்பட்டனர். முதலில் அலங்காநல்லூர் காளியம்மன் கோயில், முனியாண்டி கோயில், அரியமலை சாமி கோயில் காளைகள் களமிறங்கின. இவற்றை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு சுற்றாக களமிறக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக பாய்ந்து வந்தன. மொத்தம் 825 காளைகள் களமிறங்கின. 303 மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு, காளைகளின் திமிலை பற்றி மல்லுக்கட்டினர். சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் மிரட்டின. பார்வையாளர்கள் உற்சாகத்துடன் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. சிவகங்கை மாவட்டம், பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 26 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் கார் மற்றும் பசுமாடு கன்றுடன் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த அஜய், 20 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்து பைக் பரிசு பெற்றார். மதுரை அலங்காநல்லூரை சார்ந்த ரஞ்சித் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்தார். இவருக்கு 3வது பரிசாக பைக் வழங்கப்பட்டது.
பிடிபடாமல் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளை முதல் இடத்தை பிடித்தது. இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒரு கார் மற்றும் பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் காளை 2ம் இடத்தை பிடித்து, பைக் பரிசாக பெற்றார். மதுரை உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டாணி ராஜாவின் காளை மூன்றாம் இடத்தை பிடித்து, பைக் பரிசு பெற்றார். அமைச்சர் மூர்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதுதவிர, மாவட்ட நிர்வாகம் சார்பில் 6 பேருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. அமெரிக்க பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை சார்பில் பரிசாக பசுவுடன், கன்றுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு, தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கினார். 13 வீரர்கள், காளை உரிமையாளர்கள் 24 பேர், இரு போலீசார், பார்வையாளர்கள் 14 பேர் என 53பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் பெருமளவில் வந்திருந்தனர்.
கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டி மலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி அடுத்த மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த முத்துகுமார், 7வது காளையை அடக்க முயன்றபோது காளை அவரை முட்டி தள்ளியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதேபோல் கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் சோர்வடைந்த நிலையில் மைதானத்துக்குள் தடுப்பு கம்பி ஓரம் அமர்ந்திருந்த போது பாய்ந்து வந்த ஒரு காளை அவரது முகத்தில் குத்தியது. இதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி பெருமாள் கோயில் மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 544 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 240 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த ஆவாரங்காடு பொன்னர் சங்கர் கோயில் திடலில் நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்க முயன்றபோது, 10 வீரர்கள் மாடுகள் முட்டி காயமடைந்தனர்.
* சீறும் காளைகளுடன் வந்த சிங்கப் பெண்களுக்கு பரிசு
மதுரை மாவட்டம், மேலசின்னம்பட்டியை சேர்ந்த செல்வராணி மற்றும் கருப்பாயூரணியை சேர்ந்த மோகலெட்சுமி ஆகியோர் தங்களது காளைகளை கொண்டு வந்தனர். இதனையறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செல்வராணிக்கு தங்க மோதிரம், மோகலெட்சுமிக்கு தங்கக்காசு பரிசு வழங்கி பாராட்டினார்.
* ‘விளையாடிய’ விஐபி காளைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரி, இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டைமானின் காளைகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளைக்கொம்பன், கருப்பு ஆகிய காளைகள், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரின் இரு காளைகள், முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் டிடிவி தினகரன் பெயர்களில் களமிறக்கப்பட்ட காளைகளும் பரிசுகள் பெற்றன.
* ஜல்லிக்கட்டுக்கு தேசிய அங்கீகாரம் பெற பரிந்துரை
அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை மத்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மிட்டல் அளித்த பேட்டியில், ‘‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஜல்லிக்கட்டுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்க, பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் பரிந்துரை செய்வேன்’’ என்றார்.
* மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 700 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 130 பேர் காயமடைந்தனர். மார்பில் காயமடைந்த மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சுக்காம்பட்டியை சேர்ந்த பூமிநாதன்(52) காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோயில் திடலில் நேற்று காலை மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. 247 காளைகள் பங்கேற்றன. திடல் முழுவதும் கூட்டமாக இருந்ததால் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நாலாபுறமும் தெறித்து ஓடின. இதில் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த ஒரு காளை, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் புதுவயல் காமராஜர் நகரை சேர்ந்த கணேசனை (58) முட்டி தூக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். காளைகளை அடக்க முயன்றதில் 30 வீரர்கள் காயம் அடைந்தனர்.
* உயிரிழந்த வீரருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
பாலமேடு ஜல்லிக்கட்டில் நேற்று முன்தினம் உயிரிழந்த அரவிந்த் ராஜ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் பி.மூர்த்தி, தமிழக அரசு சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.3 லட்சம், தன் சார்பிலும், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் சார்பிலும் தலா ரூ.1 லட்சம் என ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவியை வழங்கினார்.
* அடங்காத ரூ.1 லட்சம் பரிசு காளை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நகரப்பட்டியை சேர்ந்த பூசாரி என்பவர் தனது காளையை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட்டார். அப்போது, இந்த காளையை பிடிக்கும் வீரருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு தருகிறேன் எனக்கூறி, பணக்கட்டையும் உயர்த்திப்பிடித்துக் காட்டினார். ஆனால், அந்த காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை.
* காலையில் ‘கமகம’ கேசரி மதியம் மட்டன் பிரியாணி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வீரர்கள் 400 பேர், காளைகளின் உரிமையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 3 ஆயிரம் போலீசார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேற்று காலையில் வெண்பொங்கல், இட்லி, கேசரி, வடை உணவாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் அசைவ உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜ மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் வந்த நிர்வாகிகள், மாநிலத்தலைவர் அண்ணாமலை பெயரில் ஒரு பரிசு அறிவிக்கும்படி அமைச்சர் பி.மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, அண்ணாமலை பெயரில் வெற்றி பெற்ற 10 காளைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
* பயிற்சி அளித்தபோது காளை குத்தி கிழித்து மாணவன் உயிரிழப்பு
வேலூர் அடுத்த அரியூர் குப்பம் கிராமத்தில் நண்பர்கள் 3 பேர், காளை மாடுகளை வாங்கி, ஜல்லிக்கட்டில் பங்கேற்க நீச்சல், ஓட்டப்பயிற்சிகளை கடந்த 3 மாதங்களாக அளித்து வந்தனர். நேற்று காலையிலும் அரியூர் குப்பம் குட்டையில் நீச்சல் பயிற்சி அளித்துவிட்டு, பிரதான தெருவில் ஓட விட்டு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். இதில் குப்பம் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர் சுரேஷின் மகன் 9ம் வகுப்பு மாணவன் ஜெகதீஷின் வயிற்றில் காளை திடீரென குத்தி கிழித்தது. இதில் குடல் சரிந்த நிலையில் அவரை ஸ்ரீபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெகதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
* ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிவந்த மினி வேன் மீது பஸ் மோதி 2 பேர் பலி, 3 காளை உயிரிழப்பு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 3 காளைகளை மினி வேனில் ஏற்றிக்கொண்டு மணப்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். வேனை விக்கி என்ற பாலமுருகன் (30) ஓட்டி சென்றார். ஆலங்குடி அருகே வம்பன் என்ற இடத்தில், புதுக்கோட்டையில் இருந்து ரெகுநாதபும் சென்ற அரசு பஸ், வேன் மீது மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் டிரைவர் விக்கி என்ற பாலமுருகன், மணப்பாறையை சேர்ந்த மதியழகன் (27) ஆகியோர் உயிரிழந்தனர். வேனில் வந்த 7 பேர், பஸ்சில் கண்டக்டர் உள்பட 5 பேர் என 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 3 ஜல்லிக்கட்டு காளைகளும் பரிதாபமாக இறந்தன. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.