துருக்கி நிலநடுக்கம்: பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை – 72 மணி நேரத்திற்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு
துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதால், காணாமல் போன மேலும் பலர் உயிருடன் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்கேண்டிருன் நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், அங்கே நிலநடுக்கத்தால் சரிந்து கிடந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்தனர். இதையடுத்து, அங்கு சுற்றிலும் குழுமியிருந்த மக்களை அமைதி காக்குமாறு அறிவுறுத்திய அவர்கள், கிரேன் போன்ற தங்களது இயந்திரங்களின் இயக்கத்தையும் நிறுத்தினர்.
சில நிமிட அமைதிக்குப் பின்னர், அங்கு பெண் ஒருவர் உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக் குழுவினர், ஆம்புலன்சை வரவழைத்தனர்.
நிலநடுக்கம் தாக்கிய 3 நாட்களுக்குப் பிறகு பெண் உயிருடன் மீட்கப்பட்டதைக் கண்டதும் சுற்றிலும் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே கட்டடத்தில் வசித்த தனது உறவினர்களின் கதி என்னவென்று இன்னும் தெரியாத ஒரு பெண், அங்கிருந்த காரின் முன்பகுதியில் முகம் புதைத்து அழுததைக் காண முடிந்தது.
பெண் உயிருடன் மீட்கப்பட்டதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த நபர் பிபிசியிடம் பேசுகையில், திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த 6 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமான பிறகு இப்போதுதான் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“சுமார் 50 வயதான அந்த பெண், தனியாக வசித்து வந்தார். அவரை மீட்புக்குழுவினர் பத்திரமாக தூக்கிச் சென்றதை ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்த அவரது மகன் பார்த்துக் கொண்டிருந்தார்” என்று உள்ளூர் மக்கள் கூறினர்.
அங்கிருந்த பலருக்கும், காணாமல் போன அவர்களது உறவினர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த மீட்புக் காட்சி கொடுத்துள்ளது. இதுபோன்ற அற்புதம் நிகழும் என்று பெண் ஒருவர் கூறினார்.
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கிடையே, இந்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரக் கூடிய மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது.
இடிபாடுகளுக்கு நடுவே வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறியும் பணியை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே மீண்டும் தொடங்க, பணி மெதுவாக நடந்ததால் அங்கே சுற்றிலும் கூடியிருந்தவர்களின் மனநிலை மீண்டும் அமைதியற்றதாக மாறிப் போனது.
உள்ளூர் மருத்துவர் மெஹ்மத் ரியாத், திங்கட்கிழமை முதல் மருத்துவ ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என்று கூறினார்.
“இடிபாடுகளில் சிக்கி நசுங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். எலும்பு முறிவு, உடைந்த கழுத்துகள், தலையில் காயங்களுடன் ஏராளமானோரை கண்டிருக்கிறோம். அதிக உயிரிழப்புகளையும் கண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
“மருத்துவர்களாக நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய வேண்டும். ஆனால் உதவிக் குழுக்கள் பொறுப்பேற்கும் போது, நாங்கள் சொந்த குடும்பங்களைப் பற்றி சிந்திக்கிறோம்.” என்றார் அவர்.
இஸ்கேண்டிருன் நகரில் திரும்பும் இடமெல்லாம் பேரழிவின் கோரத்தை பார்க்க முடிகிறது. பரபரப்பான மருத்துவமனைகள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து கிடக்கின்றன.
உறவுகளைத் தேடி நீண்ட பயணம்
இஸ்தான்புல் நகரில் விமானத்தைப் பிடிக்க காத்திருந்த சாமெட் இல்மாஸ் என்பவர், தனது செல்போனில் சகோதரரின் புகைப்படத்தைக் காட்டுகிறார். நிலடுக்கத்தால் இடிந்து போன வீட்டின் சிதைவுகளுக்குள் அவர் புதையுண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
பஹ்ரைனில் வசிக்கும் சாமெட், நிலநடுக்கத்திற்குப் பிறகு உறவுகளைத் தேடி தெற்கு துருக்கி நோக்கி பயணிக்கும் ஏராளமான மக்கள் திரளில் ஒருவர். மற்றவர்களைப் போலவே அவரும், தானே நேரடியாக சென்று கட்டட இடிபாடுகளை அகற்றினால் சகோதரனை மீட்டுவிட முடியும் என்று நம்புகிறார்.
26 வயதான சகோதரர் இஸ்மாயில், ஹாதே மாகாணத்தில் உள்ள உறவினர்களுடன் தங்கி, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மைத்துனர் உள்ளிட்ட மற்றவர்கள் மீட்கப்பட்டு விட்ட நிலையில், இஸ்மாயில் எங்கே என்று இன்னும் தெரியவில்லை என்கிறார் சாமெட்.
“அவன் இல்லாத வெறுமையை என்னால் உணர முடிகிறது. அவனைத் தேடவே நான் பஹ்ரைனில் இருந்து துருக்கிக்கு வந்துள்ளேன். அவன் என்னுடைய ஒரே சகோதரன்,” என்று மிகவும் உருக்கத்துடன் அவர் கூறினார்.
சாமெட் மட்டும் அல்ல, காணாமல் அன்புக்குரியவர்களைத் தேடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் செல்லும் துருக்கி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரிடம் பிபிசி பேசியுள்ளது.
அன்டாக்யா நகரில், செவ்வாய்க்கிழமையன்று நிலநடுக்கத்தால் இடிந்து கிடக்கும் கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றி, உள்ளே யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்று சிலர் தேடிக் கொண்டிருந்தனர். கட்டிடத்தில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்றும், இஸ்தான்புல்லில் இருந்து தங்கள் உறவினர்களைத் தேடி வந்திருப்பதாகவும் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நிலநடுக்க பாதிப்புகளை அரசு எதிர்கொண்ட விதம் குறித்து அதிருப்தி அதிகரித்துள்ள சூழலில், விமர்சனங்களுக்கு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் பதிலடி கொடுத்துள்ளார்.
“இவ்வளவு பெரிய பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பது இயலாத காரியம்,” என்று அவர் கூறியுள்ளார்.