கடலூரில் குழந்தைகளை வாங்கி விற்கும் கும்பல் கைது – நான்கு பேரிடம் போலீஸ் விசாரணை
பெற்றெடுத்த குழந்தையை தேவையற்றது (Unwanted Babies) என்று கருதுபவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி, அதை குழந்தை இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் கும்பலை கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எங்கு நடந்தது இந்த சம்பவம்?
கடலூர் மாவட்டம் வடலூரில் சித்த மருத்துவ சிகிச்சையகம் நடத்தி வருபவர் மெஹர்னிசா (வயது 67). இவர் தன்னை சித்த மருத்துவர் என்று காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பெற்ற குழந்தையை வளர்க்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு குழந்தையை வாங்கி விற்கும் வேலையை மெஹர்னிசா மற்றும் அவருடன் இணைந்து சிலர் செய்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பாக கடலூர் மாவட்ட குழந்தைகள் தொலைபேசி உதவி எண்ணுக்கு (Child Helpline) வடலூரை சேர்ந்த சுடர்விழி (வயது 37) என்ற பெண்மணி சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாக நேரில் சென்று ஆய்வு செய்ததில், சுடர்விழி என்பவரிடம் சந்தேகத்திற்குரிய வகையில் குழந்தை இருந்தது உறுதியானது.
பின்னர் விசாரணையில், அந்த குழந்தையின் உயிரியல் தாய் நீங்கள் தானா? என்பதை நிரூபிக்கும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த குழந்தை தன்னுடையது என்பதை நிரூபிக்கும் பிறப்பு மற்றும் மருத்துவ சான்று எதுவும் அந்தப் பெண்ணிடம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது
தொடர்ந்து சுடர்விழியிடம் விசாரணை செய்ததில், “இது தன்னுடைய குழந்தை இல்லை,” என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த குழந்தையை வடலூரை சேர்ந்த மெஹர்னிசா என்பவரிடம் இருந்து ரூ.3.50 லட்சத்திற்கு வாங்கியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மெஹர்னிசாவை கைது செய்து விசாரணை செய்ததில் இதுபற்றி கூடுதல் தகவல் தெரிய வந்தது என போலீஸார் கூறுகின்றனர்.
தற்போது மீட்கப்பட்ட குழந்தையின் ‘உயிரியல் தாயார்’ யார் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக சிதம்பரம் காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யார் மூலமாக இவர் குழந்தையை வாங்குகிறார். அந்த குழந்தையை இடைத்தரகர் மூலமாக விற்பனை செய்வது பற்றிய தகவல் விசாரணையில் காவல் துறையினர் கேட்டறிந்தனர். அந்த தகவலின் அடிப்படையில் புவனகிரியை சேர்ந்த ஷீலா மற்றும் சீர்காழியை சேர்ந்த ஆனந்தன் உள்ளிட்டோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“இதில் ஷீலா என்பவர் எந்தெந்த பகுதியில் குழந்தைகள் உள்ளதோ அதை வாங்கி, மெஹர்னிசாவிடம் கொடுக்கும் வேலையை செய்கிறார். மெஹர்னிசா அந்தக் குழந்தையை வாங்கி, பின்னர் குழந்தை தேவைப்படும் நபர்களுக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்யும் இடைத்தரகரான ஆனந்தனை அணுகுகிறார்.
இதுமட்டுமின்றி இந்த வழக்கில் மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள் இன்னும் விசாரணை வளையத்தில் கொண்டுவரவில்லை. ஆனால் அவர்கள் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்,” என்று சிதம்பரம் காவல் துறை உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் விவரித்த அவர், “இது கடத்தல் அல்லது குழந்தை பறிப்பு வழக்கு இல்லை. ஒருவர் பெற்றெடுத்த குழந்தையை அது தேவையற்றது (Unwanted Babies) என்று கருதுபவர்களிடம் இருந்து வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை வாங்கி விற்பது தெரிய வந்துள்ளது. மற்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
இதுவரை நான்கு பேரை விசாரணை காவலில் வைத்துள்ளோம். இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் தேவையற்ற குழந்தைகள் மட்டுமே இதில் ஈடுபடுத்துகின்றனர். குறிப்பாக திருமண உறவில் பெற்றெடுக்கப்படாத குழந்தைகள், மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் குழந்தை வளர்க்க கஷ்டப்படும் நபர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, வேறு நபருக்கு விற்பது தான் தேவையற்ற குழந்தைகள் (Unwanted Babies) என்று இதில் குறிப்பிடுகிறோம்.
இதுபோன்று வரும் குழந்தைகளை ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொடுத்து வாங்கி அதை மேலும் கூடுதல் பணத்திற்கு விற்கின்றனர்.
இதுவரை விசாரணையில் இரண்டு குழந்தைகள் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் குழந்தைகள் விற்பனை செய்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதால் தொடர்ந்து விசாரணைசெய்து வருகிறோம்,” என்கிறார் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி.