Breaking News
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு – ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி…!

சென்னை,

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பஸ்நிலைய கட்டுமான பணிக்காக 393.74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

கொரோனா காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன. தினந்தோறும் ரூ.1½ லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 209 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் இடம், தங்குமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. எஞ்சிய சில பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதனால், இன்னும் சில நாட்களில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மக்கள் பயன்பட்டிற்கு வர உள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.

அன்பரசன் இன்று நேரில் ஆய்வு செய்தனர். புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.