மோடி குறித்து அவதூறு: ராகுல்காந்தி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு?
சூரத்,
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
அப்போது அவர், ”எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று கேட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு சூரத் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில், மோடி குறித்து அவதூறாக ராகுல் காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று (23-ந் தேதி) தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சூரத் கோர்ட்டு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கில் தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் இன்று ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராவார் என்று அவருடைய வக்கீல் கிரித் பன்வாலா தெரிவித்துள்ளார்.