பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்ட ரூ.183 கோடி மதிப்பிலான கட்டிடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி இணையம் சார்பில் ரூ.183.60 கோடி செலவில் கட்டிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அன்பு நகரில் ரூ.6.8 கோடியிலும், தஞ்சாவூர், நீலகிரி தெற்கு தோட்டத்தில் ரூ.4.48 கோடியிலும், கிருஷ்ணகிரி ஒசூர் திட்டப் பகுதி-3ல் ரூ.5.31 கோடியிலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ், திண்டுக்கல் பேருந்து நிலைய காலனியில் தூண் மற்றும் ஆறு தளங்களுடன் ரூ.19.17 கோடியில் கட்டப்பட்டுள்ள 88 அடுக்குமாடி வீடுகள், சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் தூண் மற்றும் ஒன்பது தளங்களுடன் ரூ.108.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 504 அடுக்குமாடி வீடுகள், தேனி மாவட்டம் வீரபாண்டியில் ரூ.13.14 கோடியில் தூண் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், சென்னை, சாஸ்திரி நகரில் ரூ.14.71 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக மற்றும் அலுவலக வளாகம் என மொத்தம் ரூ.171 கோடியே 36 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் ஈரோடு, சம்பத் நகர் திட்டப்பகுதியில் ரூ.2.27 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடம், சேலம் தளவாய்பட்டி கிராமத்தில் ரூ.5.37 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடம், கோயம்புத்தூர் கணபதி கிராமத்தில் ரூ.3.24 கோடியில் கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.10.88 கோடியில் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் முதல்வர் வழங்கினார்.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மதுரையில் ரூ.30 லட்சத்திலும், கோயம்புத்தூரில் ரூ.30 லட்சத்திலும் புதுப்பிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இம்மண்டல அலுவலகங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி உதவி அளிக்கும் தலைமை நிறுவன இணையமாக செயல்படுகிறது. மேலும், உறுப்பினர்கள் எளிதாக கடன் பெறுவதற்கும், சங்கங்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கும், மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் மற்றும் வீட்டுவசதி கடன்களும் நேரடியாக வழங்கப்படும்.
மேலும், செங்கல்பட்டு மடிப்பாக்கத்தில் கார்த்திகேயபுரம் கூட்டுறவு சங்கத்தின் சமுதாயநலக்கூடத்தில் ரூ.75 லட்சம் செலவில் மின்தூக்கி மற்றும் இதர வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்ட கார்த்திகேயபுரம் கூட்டுறவு சங்க சமுதாயக்கூடத்தை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார். இதன்மூலம், சங்க உறுப்பினர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை கட்டணத்தில் நடத்திடவும், அப்பகுதி மக்களும், சங்க இணை உறுப்பினர்களும் நிகழ்ச்சிகளை நடத்தி பயன்பெறவும் வழிவகை ஏற்படும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் செல்வி அபூர்வா, வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.