லஞ்ச ஒழிப்பு துறையால் பரிசுத்தமாக்கப்பட்ட குற்றவாளிகள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையால் தண்டிக்கப்பட்டவரும், போலி சோதனை நடத்தியவருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையால் நற்சான்றுடன் பணி அதிர்ச்சி தகவல்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி லஞ்ச ஒழிப்பு துறையால் குற்ற எண் 8/2008 என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளானவரை குமரி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராக்கி பரிசுத்தமாக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தவறு செய்ததாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆறு மாத சஸ்பெண்ட் ஆகியவை கால சக்கரத்தில் சிக்கி அழிந்து போனதாக கூறப்படுகிறது. இதே போல குமரி மாவட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மதியழகன் என்பவர் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலியாக சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்க முயற்சித்த சம்பவத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி பதிவுகள் மூலம் அவருடைய வண்டவாளம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் ஒப்பந்ததாரர் ஒருவர் முதலமைச்சரின் மரம் நடும் திட்டத்தில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் வனத்துறையினரும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் முக்கியமான குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஒப்பந்ததாரரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி பிரதிபலன் பெற்று அவரை காப்பாற்றியதாகவும் நீதிமன்றத்தில் அவரை அரசு தரப்பு சாட்சியாக சாட்சி கூற வைத்த தகவலும் வெளியானது. இவ்வாறு அந்த டி எஸ் பி யின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிய நிலையில் அவர் குமரி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரை உடனே பரிசுத்தப்படுத்தி தென்காசி மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக நியமித்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே குறிப்பாக திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலேயே தற்போது இருக்க வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு குற்றவாளிகளாக இருந்தவர்கள் தற்போது பரிசுத்தப்படுத்தப்பட்டவர்களாக மாற்றப்பட்டு அதே லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய இடங்களிலேயே பணியமர்த்தப்பட்டு உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த அளவிற்கு “சிறந்து விளங்குகிறது” என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே பெருமை கொள்ளும் விதத்தில் நம்மையெல்லாம் புல்லரிக்க செய்யும் விதத்தில் உள்ளது என்றால் மிகையல்ல. லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் மிகச்சிறந்த உயர் அதிகாரிகளாக இயக்குனர் கந்தசாமி மற்றும் துணை இயக்குனர் லட்சுமி ஐபிஎஸ் ஆகியோர் இருக்கும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டவர் அந்த வழக்கில் குற்றவாளி என்ற நிலையிலும் மற்றொரு டிஎஸ்பி மதியழகன் லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்றி அந்த ஒப்பந்ததாரரை காப்பாற்ற வழக்கை குழி தோண்டி புதைத்த நிலையிலும் மற்றும் போலியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தி சிசிடிவி மூலம் அவரது போலி சோதனை வெளியாகி லஞ்ச ஒழிப்பு துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் குறுகிய நாட்களில் தனது சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு அருகே தென்காசி மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஆகி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலேயே உட்கார்ந்து பணி செய்ய பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் தான் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் களங்கத்தை துடைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றவாளிகளின் புகலிடமாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறுவதை தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது