
தூத்துக்குடி வழக்கறிஞரை கொலை செய்தவர்கள் போலீசிடம் சிக்காமல் தப்பமுயன்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் கை முறிந்தது
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நடந்த வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம் கொலை வழக்கில் 6 பேர் பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் (32) என்பவரை நேற்று முன்தினம் (11.05.2024) இரவு அவரது வீட்டருகே வைத்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசாருக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட செந்தில் ஆறுமுகம் என்பவருக்கும் அவரது தங்கையின் கணவரான நாலாட்டின்புதூர் ஜீவன் காலனியைச் சேர்ந்த லெனின் மகன் கோபிநாத் (37) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோபிநாத் நேற்று தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியநாயகம் மகன் சங்கர் (எ) சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராம்குமார் (25), தூத்துக்குடி P & T காலனியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் தமிழ்செல்வம் (24) மற்றும் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து செந்தில் ஆறுமுகத்தை, அவரது வீட்டருகே வைத்து அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணி நேரத்தில் 1. கோபிநாத், 2. சங்கர் (எ) சங்கரலிங்கம், 3. மணிகண்டன், 4. ராம்குமார், 5. தமிழ்செல்வம் மற்றும் 6. ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் கொலையுண்ட செந்தில் ஆறுமுகத்தின் உடன்பிறந்த தங்கையின் கணவரான கோபி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததும், கோபியும், சங்கர் என்ற சங்கரலிங்கமும் கொலை செய்துவிட்டு, போலீசிடம் சிக்காமல் தப்புவதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியதில் அவர்கள் கை உடைந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.