கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் சென்னை: இன்னும் 3 மாதங்கள் சமாளிக்கலாம் என அதிகாரிகள் தகவல்
ஏரிகள் வறண்டுபோவதால் குடிநீர் விநியோகம் 35% குறைப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு வருவதால், தினசரி குடிநீர் விநியோகம் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நீர்ஆதாரத்தைக் கொண்டு 3 மாதங்களுக்கு குடிநீர் விநியோகிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்துக்கு சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என கூறப்படுகிறது.
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால் சென்னையின் நீர்ஆதாரமாக விளங்கும் ஏரிகள், கோடை தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் வறண்டுவிட்டதால், சென்னையில் தினமும் விநியோகிக்கும் குடிநீரின் அளவை சென்னை குடிநீர் வாரியம் குறைத்துள்ளது. இதனால், சென்னை மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் விநியோக அளவு குறைக்கப்பட்டதால், குழாயில் வரும் நீரின் அழுத்தம் குறைந்து, பெரும்பாலான வீடுகளில் குடிநீர் வருவதே ஏறக்குறைய நின்று விட்டது. குடிநீர் வாரிய லாரிகளில் விநியோகித்தாலும், குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் தனியார் லாரிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஒரு குடம் குடிநீர் விலை ரூ.7 ஆக இருந்தது. அது தற்போது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
550 மில்லியன் லிட்டர்
சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மக்களுக்கு விநியோகிக்க தினமும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. மீஞ்சூர், நெம்மேலியில் இயங்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர், வீராணம் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டர், 4 ஏரிகளில் இருந்து 470 மில்லியன் லிட்டர் என மொத்தம் 850 மில்லியன் லிட்டர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுவது வழக்கம். ஏரிகள் தற்போது வறண்டு வருவதால், தினசரி குடிநீர் விநியோகம் 35 சதவீதம் குறைக்கப்பட்டு, 550 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் தேவையை சமாளிக்க பரவனாறு, நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியில் இருந்து 60 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகள் மூலம் 70 மில்லியன் லிட்டர் தினமும் கொண்டுவரப்படுகிறது.
மாற்று நீர்ஆதாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர் குடிக்க உகந்ததா என ஆய்வு செய்து வருகிறோம். பழுதடைந்த கை பம்ப்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 75 கை பம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 மாதம் சமாளிக்கலாம்
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிருஷ்ணா நதிநீர் இதுவரை 2,030 மில்லியன் கன அடி வந்துள்ளது. இன்னும் 1,000 மில்லியன் கனஅடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரிகளில் நீர் இருப்பு, கிருஷ்ணா நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கலாம். 3 மாதங்களுக்குப் பிறகு தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும்’’ என்றனர்.
பஞ்சம் ஏற்படும் அபாயம்
தென்மேற்கு பருவமழையால் சென்னைக்கு குறிப்பிடும்படியான மழை கிடைக்காது. அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருமழையால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். தற்போதுள்ள நீர்ஆதாரத்தைக் கொண்டு 3 மாதங்களுக்கு (மார்ச், ஏப்ரல், மே) குடிநீர் தேவையை சமாளிக்கலாம் என்று பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது. அக்டோபரில் பருவமழை ஆரம்பிக்கும் வரையிலான 4 மாதங்களுக்கு (ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) சென்னை மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
ஏரிகளில் 7-ல் ஒரு பங்கு நீர்
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. இவற்றில் தற்போது 1,693 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது, சுமார் 7-ல் ஒரு பங்கு தண்ணீர்தான் தற்போது இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 8,528 மில்லியன் கனஅடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தி இந்து தமிழ்