10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி: பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் சார்பில் தமிழகம் முழுவதும் நிகழாண்டில் 10 ஆயிரம் பேருக்கு இலவச வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் பிஎஸ்என்எல் ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், பத்தாம் வகுப்பு பயின்ற இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்மூலம், பயிற்சி பெற்றவர்கள் பிஎஸ்என்எல் உள்பட தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
7 வகையான பயிற்சி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் – பிஎஸ்என்எல் இணைந்து, மீனம்பாக்கம் பயிற்சி மையத்தில் அகண்ட அலைவரிசை, பைபர் சிஸ்டம்ஸ், ஆப்டிக்கல் பைபர் உள்ளிட்ட 7 பிரிவுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகின்றன. இந்த பயிற்சியானது 2,3,6 மாத கால அளவில் வழங்கப்படுவதுடன், பயிற்சி நிறைவில் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பெற்றவர்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தல், கண்காணித்தல், பராமரித்தல், சேவைகள் உள்ளிட்ட பணிகளில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
கூடுதலாக பயிற்சியாளர்கள் சேர்க்கை: நடப்பாண்டிலிருந்து கூடுதல் நேரத்துடன் 10 வாரங்கள் வரை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், பிஎஸ்என்எல் ஜிஎஸ்எம் நேரடி விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பயிற்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், கூடுதல் பயிற்சியாளர்களை சேர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
ரூ.15 கோடி நிதி: தமிழ்நாடு திறன்மேம்பாட்டு மையத்தின் மூலம் இந்தப் பயிற்சிகளுக்கு நிதி பெறப்படுகிறது. தற்போது இந்தப் பயிற்சி 5 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதற்கானசேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
இதுவரை 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டில் அதிகமானோர் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.