ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்ப விநியோகம்
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து வரும் மார்ச் 6 -ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கபடவுள்ளன. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50. விண்ணப்பங்கள் மார்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.