வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி வந்துவிடும் என்று அர்த்தம் அல்ல: சமந்தா
வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி வந்துவிடும் என்று அர்த்தம் அல்ல என்று சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. அதே படம் தெலுங்கில் ‘ஏ மாயா சேஸாவே’ என்ற பெயரில் தயாரானது. அதில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக அறிமுகமானார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இப்படம் வெளியானது. நாயகியாக அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆனதையொட்டி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “7 வருடங்கள் முடிந்துவிட்டன. நான் இப்போதும் பேசும் மனநிலையில் இருக்கிறேன். குடிசையிலிருந்து கோபுரம் சென்றவர்களின் கதை போல என் கதையிலும் எனக்கான கடின உழைப்பு, பாதுகாப்பின்மை, தோல்வி, நிராகரிப்பு, வலி, சோகம், வெற்றி, புகழ் மற்றும் செல்வம் ஆகியவை இருந்திருக்கின்றன. ஆனால் நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. மகிழ்ச்சி அவ்வளவு எளிதானதும் அல்ல.
இயல்பு நிலை என்ற கலையை கற்க, தினமும் படப்பிடிப்பு செல்லவில்லை என்றால் நான் தோல்வியடைந்ததாக அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொள்ள, சமூக ஊடகங்கள் என்னை அவதூறு செய்பவர்கள் என்னைப் பற்றி நினைப்பதை விட நான் அவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன் என்பது புரிய, பிரச்சினை வரும்போது எனக்கு மாரடைப்பு வந்து நான் ஒன்றும் இறந்து விடமாட்டேன் என்பது புரிய, எப்போதும் இன்னொரு முறை இருக்கிறது என்றும், முக்கியமாக, கதையின் உண்மையான வெற்றி, அதில் மற்றவர்களையும் இணைக்கும் போதுதான் என்பதை புரிந்து கொள்ளவும் 7 வருடங்கள் தேவைப்பட்டது.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இவ்வளவு நாட்கள் நான் கற்றது என்னவென்றால், இந்த செல்வம், இந்த வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி வந்துவிடும் என்று அர்த்தம் அல்ல. சினிமா எனக்குத் தந்த மிகப்பெரிய ஆசிர்வாதமே அது என் வாழ்க்கைக்கு அறிமுகம் செய்துவைத்துள்ள மக்கள்தான். அவர்கள் எனது முழு இயல்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அது உங்களின் அன்பைப் பெற்றுத்தந்துள்ளது. அது, மோசமான சமயங்களில் நான் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அன்பு. சந்தோஷமான சமயங்களில் நன்றியுடன், அன்புடனும் பிடித்துக் கொள்ளும் அன்பு. மிக்க நன்றி. உங்கள் அனைவர் மீதும் வாழ்நாள் முழுவதும் நானும் திரும்ப அன்பு செலுத்திக்கொண்டிருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.