10ம் வகுப்பு  மாணவன் மரணத்தில் நியாயம் கேட்டு மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா

10ம் வகுப்பு மாணவன் மரணத்தில் நியாயம் கேட்டு மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுங்கலான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள். இவர் தனது கணவர் பிரவீன்குமாரை பிரிந்து தனது குழந்தைகள் நிதிஷ், மனோஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இதில் நிதிஷ் குரு மலையில் உள்ள கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 30.11.2023ல்  அன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு மாணவர் நிதிஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது விசாரித்தபோது பள்ளி தாளாளர் பலவேசம் என்ற செல்வம் பள்ளியில் இருக்கும் மாடுகளை மேய்க்க சொன்னதாகவும்,, அதற்கு மறுத்த காரணத்தினால் அவர் சாதியை சொல்லி திட்டி பள்ளி அறையில் பூட்டி வைத்து தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது தாய் முத்தம்மாள், நிதிஷை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 08.12.2023 அன்று மாணவர் நிதிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து முத்தம்மாள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் எவ்வித விசாரணையும் நடத்தாமல் வழக்கினை முடித்து விட்டதாகவும், மாணவர் குறித்த தடயவியல் அறிக்கை வருவதற்கு முன்பே வழக்கு கைவிடப்பட்டதாக கூறியுள்ளது சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும், மாணவர் நிதிஷ் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் முத்தம்மாள் மற்றும் அவரது உறவினர்கள்  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரின் புகைப்படம், பல்வேறு போட்டிகளில் மாணவர் வெற்றி பெற்ற சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியவற்றை வைத்து மாணவர் மரணத்திற்கு நியாயம் கேட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

செய்தியாளர் – முத்துக்குமார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )