சொகுசு கார் உள்ளிட்ட நவீன சாதனங்களுடன் சவுதி மன்னர் இந்தோனேசியா பயணம்
சவுதி அரேபியா மன்னர் சல்மான், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 47 ஆண்டுகளில் சவுதி மன்னர் ஒருவர் அந்த நாட்டுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.
சவுதி மன்னர் சல்மான் நேற்று தனது சிறப்பு விமானத்தில் ஜகார்த்தா விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். மன்னருடன் இளவரசர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட மொத்தம் சுமார் 1,000 பேர் சென்றுள்ளனர்.
விமானத்திலிருந்து இறங்கு வதற்கான எஸ்கலேட்டர், மெர்சிடிஸ் சொகுசு கார்கள் உட்பட மன்னருக்கு தேவையான மொத்தம் 460 டன் எடை கொண்ட அதிநவீன சாதனங்கள் சவுதியிலிருந்து அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஜகார்த்தா சென்றுள்ள சல்மான், விடோடோவை அவரது இல்லத்தில் சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்து கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் சல்மான் உரையாற்றுகிறார்.
இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உட்பட் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் பாலி தீவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சில நாட்களுக்கு சல்மான் ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.