140 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைவான மழையால் வறட்சி
தமிழகத்தில் 13 லட்சம் ஹெக்டேரில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், வாசனை திரவிய செடிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் காய்கறிகள் மட்டும் 2 லட்சத்து 907 ஹெக்டேரில் சாகுபடி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 500 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த 150 ஆண்டுகளில் மிகக் குறைந்த வடகிழக்கு பருவமழை அளவுகளை கணக்கிடும்போது 1876-ம் ஆண்டு மிகக் குறைவாக 163.5 மி.மீ. மழை பெய்தது. அதற்கு பிறகு 1974-ம் ஆண்டில் 233.4 மி.மீ. மழையும், கடந்த ஆண்டு 168.4 மி.மீ. மழையும் பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 140 ஆண்டு களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மிகக் குறைவாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் ஏற்பட்ட வறட்சியில் தோட்டக்கலை மரப்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு ஏமாற்றியதே இந்த வறட்சிக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி யில் தோட்டக்கலை நீண்ட கால மரப்பயிர்கள் மா, பலா, தென்னை, வாழை, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சீதாப்பழம், பப்பாளி, நெல்லி, மா போன்றவற்றைக் காப்பாற்ற தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி தோட்டக் கலைத் துறைத் தலைவர் பேரா
சிரியர் வி.சுவாமிநாதன் கூறியதா வது: தோட்டக்கலை மரப்பயிர்களை இந்த வறட்சியிலும் காப்பாற்ற விவசாயிகள் முயற்சிக்க வேண்
டும். வாடகைக்கு லாரி தண்ணீரை வாங்கி ஊற்றும் அளவுக்கு தோட்டக்கலைப் பயிர்களில் வருமானம் கிடைப்பதில்லை.
அதனால், காய்ந்த இலை, சருகுகள், மக்குகள், தென்னை நார் கழிவுகளை ஒவ்வொரு மரத்தின் வேர்ப் பகுதியில் பரப்பினால் அவை வேரில் இருந்து நீர் ஆவியாவதைக் குறைத்துவிடும். குறைந்த தண்ணீரில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.
தென்னை நார் கழிவுகளை வேர்ப் பகுதியில் பரப்பினால் ஒரு நாள் தண்ணீர் விட்டால் 10 நாட்களுக்கு அந்த மரத்தைப் பாதுகாக்கலாம். சிறிய கன்றுகள், செடிகளுக்கு மேலே தென்னை கூடை, நிழல் கூடை, தென்னை வாழை ஓலைகளை வைத்து நிழல் போர்வை அமைத்தால் கடுமையான சூரிய வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
இதுவரை சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றாதவர்கள் அதற்கு மாறலாம். சொட்டுநீர் பாசனத்தில் குறைந்த நீரைக் கொண்டு அனைத்து பயிர்களுக்கும் பாசனம் செய்யலாம். பானையில் சிறிய துளை போட்டு, அதைப் பஞ்சை வைத்து அடைத்து பானையில் தண்ணீர் ஊற்றி வேர்ப் பகுதியில் வைத்தால் அந்த துளை வழியாக சொட்டு சொட்டு நீர் கசிந்து மரங்கள், செடிகளின் வேர்களுக்கு செல்ல உதவலாம். இதனால் 15 நாள், 20 நாட்களுக்கு செடிகளைக் காப்பாற்ற முடியும். வறட்சியை தாங்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளைத் தெளிக்கலாம்.
சொட்டுநீர் பாசனம் செய்துள்ள வர்கள், காய்ந்த இலைகள், மக்குகள், தென்னை நார் கழிவுகளை செடிகள், மரங்கள் அடிப்பகுதியில் புதைத்தால் தண்ணீர் பாசனத்தை 3 நாள் முதல் ஒரு வாரம் வரை தள்ளிப்போடலாம். இடைப்பட்ட காலத்தில் 2001, 2002 ஆண்டுகளில் மழையில்லாமல் இதுபோன்ற வறட்சி ஏற்பட்டது. அப்போது நிறைய தோட்டக்கலை மரப்பயிர்கள் எடுக்கப்பட்டுவிட்டன. அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க இந்த முறைகளைப் பின்பற்றினால் நிரந்தரமாகவும், ஓரளவும் இந்த வறட்சியில் இருந்து தோட்டக்கலை மரப்பயிர் மற்றும் செடிகளைக் காப்பாற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் தோட்டக்கலை மரச் செடிகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள நிழல் போர்வை.