
பொதுமக்களை ஏமாற்றி அதிக கட்டணம் வசூல் செய்து, தீங்கு விளைவித்து வரும் பொழுதுபோக்கு பூங்காவை தடை செய்யக்கோரி மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு
தூத்துக்குடியில் Bee Town Water Park என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி அதிகமான கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, பொழுதுபோக்கு பூங்காவை தடை செய்யக் கோரி மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனர் வழக்கறிஞர் அதிசயகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது, நான் மக்கள் மேம்பாட்டு கழகம் என்ற சமூக அமைப்பின் அமைப்பாளராகவும், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்து சமூக பணிகள் செய்து வருகின்றேன்.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி தாலுகா, குமாரகிரி ஊராட்சிமன்றத்திற்குட்பட்ட டோல் கேட் மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் Bee Town Water Park என்ற பெயரில் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகின்றது. மேற்படி பொழுதுபோக்கு பூங்காவிற்கான விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் தினசரி வந்த வண்ணம் உள்ளது. மேற்படி பூங்காவிற்குள் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.750/- கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகின்றது. மேற்படி பொழுதுபோக்கு பூங்கா அரசிடமிருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாக அறிகின்றேன்.
மேற்படி பொழுபோக்கு பூங்காவிற்குள் செல்வதற்கு ஒரே ஒரு வழி மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுவழியோ, அவசர வழியோ ஒழுங்கு செய்யப்படாமல் மேற்படி பூங்கா செயல்பட்டு வருகின்றது. மேற்படி விளையாட்டு பூங்காவில் ஒருசில நீர் விளையாட்டு அம்சங்கள் அமையப்பட்டுள்ளது. நீர் விளையாட்டிற்கான நீரினை வணிக நோக்கத்தில் பல ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து உறிஞ்சி எடுப்பதினால், மேற்படி விளையாட்டு பூங்காவிற்கு அருகிலுள்ள விமானநிலையம் மற்றும் தனிநபர்களின் இடங்களிலுள்ள நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி பொழுதுபோக்கு பூங்காவானது சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஏழு விளையாட்டுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பொழுதுபோக்கு பூங்காவில் ஏழு விளையாட்டுக்கள் மட்டுமே வைத்து பொழுதுபோக்கிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அதிகமான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள Theme Park-ல் சுமார் 50க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள Bee Town Water Park ஆனது ஏழு நீர் விளையாட்டுக்கள் மட்டுமே அமைத்துக் கொண்டு, சட்டத்திற்கு புறம்பான வகையில் நீரை உறிஞ்சி, அதனை வியாபாரமாக்கி வருகின்றது.
மேற்படி விளையாட்டு பூங்காவானது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் அதிகமான கட்டணம் வசூல் செய்து, பொதுமக்களுக்கு சட்டத்திற்குட்பட்டு சேவை புரியாமல் இருப்பதை தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டியது நீதியின்பொருட்டு அவசியமாகின்றது.
மேற்படி விளையாட்டு பூங்காவில் உள்ள நீர் விளையாட்டுக்களுக்கு பயன்படுத்தப்படும் நீரானது 15 தினங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகின்றது. மேலும் நீரில் அதிகமான குளோரின் கலப்பதினால் குழந்தைகளுக்கு தோல் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் ஆகியவை ஒருவாரங்களுக்கு இருப்பதினால், மேற்படி விளையாட்டு பூங்காவை தடை செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது நீதியின்பொருட்டு அவசியமாகின்றது.
ஆகவே உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், உரிய அனுமதி இல்லாமல், பொதுமக்களை ஏமாற்றி அதிக கட்டணம் வசூல் செய்து, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபட்டு வரும் Bee Town Water Park பொழுதுபோக்கு பூங்காவை தடை செய்து பொதுமக்களை பாதுகாக்கும்படி என மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனரும், வழக்கறிஞருமான அதிசயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளார்.