
சாத்தான்குளம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் பிரபாகர் பீம்சிங் (45). அவரது மனைவி ஆஷா (33). இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடன் பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகர் பீம்சிங் மனைவி ஆஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வீட்டில் அருகில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.