இந்திய பொறியாளர் கொலையை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை: வெளியுறவுச் செயலாளர் கருத்து
இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை தனிநபரின் தவறாகவே கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற இனவெறி தாக்குதல்களை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய் சங்கர், அந்த நாட்டின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசி வருகிறார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் மெக் மாஸ்டர், அந்த நாட்டு நாடாளு மன்ற சபாநாயகர் பால் ரயான் உள்ளிட்டோரை கடந்த 2-ம் தேதி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து நேற்று அவர் அமெரிக்க வர்த்தகத் துறைச் செயலாளர் ரிட்டாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் ஜெய் சங்கர் கூறியதாவது:
இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் மூத்த தலைவர்களும் கடுமை யாகக் கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தனி நபரின் தவறாகவே கருத வேண்டும். ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் இனவெறி தாக்குதல்களை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே கன்சாஸ் மாகாண ஆளுநர் சாம் நேற்று முன்தினம் இந்திய சமூகத்தினரை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.