கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொண்டதால் வடக்கு மண்டல ஐஜி, எஸ்பி இடமாற்றம்?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கும் பணிகளை சசிகலா தரப்பினர் மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
இதில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ.சரவணன் விடுதியில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். மேலும், பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில் எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம், விசாரணை மேற்கொள்வதற்காக வருவாய்த்துறையினருடன் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைகண்ணன் மற்றும் மாவட்ட எஸ்பி.முத்தரசி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் விடுதிக்கு சென்றனர்.
அங்கு, எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, அமைச்சர்களிடம் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர்கள் சிலர் மீண்டும் அதிமுகவின் ஏதாவது ஒரு அணிதான் ஆட்சிக்கு வர உள்ளது. அப்போது, தங்களின் நிலை என்னாவாகும் என நினைத்து பாருங்கள் என எஸ்பி. முத்தரசியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, வடக்கு மண்டல ஐஜி.செந்தாமரைக்கண்ணன் சமா தானப்படுதியதாகவும். அதன் பிறகே, எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்த எஸ்பி அனுமதிக்கப் பட்டதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது. இதனால், ஐஜியின் மீதும் அமைச் சர்கள் அதிருப்தி அடைந்தனர். எனினும், எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வரா பதவியேற்றார்.
இதனால், காஞ்சிபுரம் மாவட் டத்தில் காவல்துறை மற்றும் வரு வாய்துறையில் பெரிய அளவி லான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலை யில், வடக்கு மண்டல ஐஜி.செந் தாமரைக்கண்ணன் மற்றும் எஸ்பி.முத்தரசி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரிகளின் இடமாற் றத்துக்கு, கூவத்தூரில் எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக வருவாய் துறை மற்றும் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டதே காரணம் என போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.