விசாரணை நடத்தப்படும்: இலங்கை உறுதி
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே கூறியதாவது:
துப்பாக்கிச்சூட்டில் இந்திய மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்புவில் உள்ள இந்திய துாதர் மூலம் இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இந்தியா – இலங்கை இடையே புரிதல்மிக்க சூழல் நிலவும் நிலையில், இந்திய மீனவர் சுட்டுகொல்லப்பட்டது எந்த வகையிலும் ஏற்கதக்கது அல்ல. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீனவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மீனவரை சுட்டுகொன்ற சம்பவத்தில் மீனவர் அருள் கிளிண்டன் கொடுத்த புகாரின்படி, மண்டபம் போலீசார், இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்தனர்.