
புதிதாக வாங்கிய நகைக்கு கூடுதலாக பணம் பெற்ற நகைக்கடைக்கு அபராதம் – தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தங்க நகை விற்பனையில் கூடுதலாக பெறப்பட்ட தொகைக்கான வழக்கில் 24,545 ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சார்ந்த ரங்கநாதகண்ணன் என்பவர் மேலக் கிரேட் காட்டன் ரோட்டிலுள்ள ஒரு நகைக் கடையில் தங்கச் செயின் வாங்கியுள்ளார். மனுதாரர் வீட்டிற்கு வந்து கணக்கு போட்டு பார்த்ததில் நகைக் கடைக்காரர் அதிகமான பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கு கடைக்காரர் நகையின் அளவு மற்றும் விலை ஆகியவை அன்றைய தேதியின்படி தான் உள்ளது எனக்கூறி விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தங்க நகை விற்பனையில் கூடுதலாக பெறப்பட்ட ரூபாய் 4,545, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 24,545 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.