தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் படுகாயம்

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் படுகாயம்

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள கோமஸ்புரத்தில் ராஜீவ் காந்தி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 1வது பிளாக்கில் 3வது மாடியில் ஆதிராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்றிரவு ஆதிராஜன் மகன் அருண்பாண்டியன் வீட்டின் உள்ளறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதில் அருண் பாண்டியன் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்‌. இதையடுத்து அங்கு குடியிருந்து வரும் பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள ராஜீவ் காந்தி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பல்வேறு வீடுகளில் மேற்கூரை பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அதை சரி செய்து தரும்படி அந்தப் பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பகுதி கட்டிடங்களை ஆய்வு செய்து, இதுபோன்ற விபத்துகள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )