உலகின் தலைசிறந்த வீரராகத் திகழ வேண்டும் என்பதே எப்போதும் என் விருப்பம்: விராட் கோலி உறுதி
பாலி உம்ரீகர் விருதை 3-வது முறையாக பெறும் முதல் வீரரான விராட் கோலி, எப்போதும் தான் உலகின் சிறந்த வீரராவதையே விருப்பமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
“உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே நான் எப்போதும் விரும்புகிறேன். எனவே 3 வடிவங்களிலும் என் ஃபார்ம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்தே வைத்துள்ளேன். 3 வடிவங்களிலும் இடைவெளியின்றி ஆடி அணியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவே விரும்புகிறேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங்களைச் சந்தித்து வந்துள்ளேன். இப்போதும் கூட என்னைச் சந்தேகிப்பவர்களும், என்னைப் பிடிக்காதவர்களும் உள்ளனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, நான் என் திறமை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
கடந்த 10-12 மாத கிரிக்கெட் நம்பமுடியாததாக உள்ளது. கிரிக்கெட் வீரராக ஒவ்வொருவருக்குமே திருப்பு முனை ஆண்டு என்ற ஒன்று உண்டு. 2015 பிற்பகுதி தொடங்கி 2016 முடிவு வரை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய ஆண்டு என்றே கருதுகிறேன். அனைத்து கடின உழைப்பு, தினசரி கடும் பயிற்சிகள், அனைத்து தியாகங்கள், என்று ஒன்று கூடியுள்ளன. இது அணி வீரர்களின் உறுதுணையில்லாமல் சாத்தியமில்லை.
சில வேளைகளில் சரியாக ஆடமுடியாமல் போகும், ஆனால் சாம்பியன் வீரர்களைக் கொண்ட அணியில் ஒவ்வொருவரும் தங்கள் ஆட்டத்தை கூடுதல் முயற்சி எடுத்து ஆடும்போது விரும்பத்தகுந்த முடிவுகள் கிடைப்பதை தடுக்க முடியாது.
இதனால்தான் நாங்கள் உலகின் நம்பர் 1 அணியாகத் தற்போது திகழ்கிறோம். அணியில் உள்ள திறமைக்கு இதுவே சான்று. அணி வீரர்களின் நம்பிக்கை, முயற்சி, ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது வெற்றிக்குக் காரணம், ஒருமாதிரியான கவலையற்ற அணுகுமுறைதான். ஓய்வறைக்கு வெளியே நிகழ்வதைப் பற்றி கவலைப்படாமல் ஆடினோம்.
2015 முதல் நான் இந்த அணுகுமுறையையே கடைபிடித்தேன். அதாவது நான் என் மீதே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்தேன். என்னிடம் திறமை உள்ளது, கடினமாக உழைக்கிறேன் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன். நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவே செய்வேன். வாய்ப்பு கிடைக்கும் போது போட்டிகளை வெல்லாமல் விடமாட்டேன்.
என்னை இந்த நிலமையில் வைத்திருக்கும் பிசிசிஐ-க்கு எனது நன்றி. நான் இதனை ஒரு பணியாக ஏற்கவில்லை, ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன். இது ஒரு வாய்ப்பு மற்றும் பொறுப்பு. நான் சரியானவற்றைச் செய்து சரியான உதாரணங்களை அமைத்துக் கொடுத்து ஒட்டுமொத்த அணியும் நம்பும் ஒரு பாதையைப் பின் தொடர விரும்புகிறேன்.
புனே தோல்விக்குப் பிறகு பெங்களூரு வெற்றி சிறப்பானது. இந்த வெற்றி சிறப்பு வாய்ந்தது, நான் பங்கு வகித்ததில் இது ஒரு மிகச்சிறந்த வெற்றியாகும்” என்றார் விராட் கோலி.