ரூ.100 கோடி மதிப்பில் 1,519 குடிமராமத்து திட்டப் பணிகள்: மணிமங்கலத்தில் முதல்வர் இன்று தொடங்குகிறார்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.100 கோடியில் 1,519 பணிகளை காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர் வள ஆதார மேலாண்மைக்காகவும், பயனீட்டாளர்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும், ‘குடிமராமத்து’ திட்டத்துக்கு புத்துணர்வு அளிக்க, அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்தாண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பிலான 1,519 குடிமராமத்து திட்டப்பணிகள் இன்று தொடங்கப்படுகின்றன. இத்திட்டத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில், மணிமங்கலம் ஏரியை சீரமைக்கும் திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் புரனரமைத்தல் மற்றும் பலப்படுத்தப்படுகிறது. மேலும், மதகுகள் மறு கட்டுமானம், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைக்கும் நேரத்தில், இதர மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் நீர் வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ள நீர் நிலைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்கப்படுகிறது.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை பொறியாளர் எஸ்.தினகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.