பக்கோடா குருமா
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு – 200 கிராம்
தேங்காய் – சிறிதளவு
முந்திரி – 10
கசகசா – 2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் – சிறிதளவு
ஏலக்காய் – 2
சோம்பு, மஞ்சள் தூள் – தலா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 6
மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
தக்காளி -1
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் தண்ணீரை வடித்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
தேங்காய், முந்திரி, கசகசா இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி- பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய் போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்து வரும் போது தீயைக் குறைத்துவிடுங்கள். பொரித்து வைத்திருக்கும் பக்கோடாவைப் போட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கிவையுங்கள். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். இதைச் சப்பாத்தி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.