மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்
சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால், சுண்டைக்காயை அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் அதிக நன்மைகளை பெறலாம்.நாம் ஒன்றைச் சிறுமைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அதனுடன் சுண்டைக்காயை ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், குட்டி குட்டியாய் உள்ள சுண்டைக் காய், பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.
உதாரணமாக, சுண்டைக்காயில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அதனால், சுண்டைக்காயை அவ்வப்போது நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம், அது தரும் நன்மைகளையும் பெறலாம்.
அந்த நன்மைகளைப் பற்றி…
உணவில் சுண்டைக்காயை அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், நமது உடம்பின் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படுகின்றன. சுவாசம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் தங்களின் அன்றாட உணவில் சுண்டைக்காயைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடல் சோர்வைப் போக்குகிறது. உணவில் வாரம் சில முறை சுண்டைக்காய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்பூச்சிகள் வெளியேற்றப்படும், வயிற்றுப்புண் பிரச்சினை தீரும்.
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், மார்புச்சளி, தொண்டைக்கட்டு, ஆஸ்துமா, காசநோய் போன்ற பிரச்சினைகளுக்கு சுண்டைக்காய் நல்ல நிவாரணம் தருகிறது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தி அதிகமாகக் கிடைக்கிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. சுண்டைக்காய் முற்றியதாக இருந்தால், அதை மோரில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பு தயாரித்துச் சாப்பிட்டு வந்தால், குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றிவிடும்.