சிரியாவில் சீரழியும் சிறுவர்கள்
சிரியாவில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமை பன்மடங்காக அதிகரித்துள்ளது. உள்நாட்டு போரில் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2011ல் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக சிரியாவில் கிளர்ச்சி வெடித்தது. இது, உள்நாட்டு போராக மாற, பிரச்னை பெரிதானது. இதில் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர். ஐ.நா., சபை அறிவிப்பின்படி, 20 லட்சம் சிரிய குழந்தைகள் அண்டை நாடுகளான துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி சிரியாவிலேயே தவிக்கின்றனர். 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ல் தான் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 652 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இதில், 250 பேர் பள்ளி அருகே நடந்த தாக்குதலில் உயிரிழந்தனர். தவிர, 850 சிறுவர்கள் போரில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் சிலர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டனர்.இது குறித்து ஐ.நா., குழந்தை நலனுக்கான அதிகாரி கீர்ட் கேப்பலாரி கூறுகையில்,”சிரியாவில் தினம் தோறும் நடக்கும் தாக்குதலில் சிறுவர், சிறுமிகள் அநியாயமாக கொல்லப்படுகின்றனர். இவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.