கர்ப்பத்திலிருந்துக்கும் குழந்தையின் அசைவுகளை இனி தந்தையாலும் உணர முடியும்!
ஆரோக்கியம் குறித்து கணவனுக்கு இன்னும் அதிகமான ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் பிரேஸ் லெட்டை உருவாக்கி யிருக்கிறது. வயிற்றுக் குள் இருக்கும் குழந்தை யின் நகர்தல், உதைத்தல் போன்றவற்றை உடனுக் குடன் அப்பாவும் இந்த பிரேஸ்லெட் மூலம் உணர்ந்துகொள்ள முடியும். நடைப் பயிற்சிக்காகத் தற்போது கையில் அணியக்கூடிய பிரேஸ்லெட்டைப் போலவே Fibo பிரேஸ்லெட்டும் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. தாயின் வயிற்றுப் பகுதியில் ஒரு கண்காணிப்புக் கருவி இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் கருவியிலிருந்து பிரேஸ்லெட்டுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும். குழந்தையின் அசைவுகளை மிகத் துல்லியமாக இந்த பிரேஸ்லெட் தந்தைக்கு உணர்த்திவிடும். அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைகளின்போது ஏராளமான ஆண்கள் தங்கள் குழந்தையின் அசைவுகளை உணர்ந்து, இதயத் துடிப்பை அறிந்து பரவசப்பட்டிருக்கிறார்கள். “இதுபோன்ற உணர்வுகளை நான் இதுவரை பெற்றதில்லை. வார்த்தைகளில் சொல்ல முடியாத சந்தோஷம், பரவசம் உண்டாகியிருக்கிறது. ஃபிபோ பிரேஸ்லெட் அணிந்த பிறகு குழந்தையின் மீது மட்டுமல்ல, மனைவியின் மீதும் அன்பும் மதிப்பும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஒரு தந்தை. கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபிபோ பிரேஸ்லெட், மேலும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு 2018-ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. விலையைப் பற்றி தகவல் இல்லை.
கர்ப்பத்திலிருந்துக்கும் குழந்தையின் அசைவுகளை இனி தந்தையாலும் உணர முடியும்!
லாவோஸிலிருந்து வியட்நாமுக்குச் செல்லப் பிராணியாக அழைத்து வரப்பட்டது டோர்லே கரடி. 4 வயதானபோது உரிமையாளர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் சிறிய கூண்டுக்குள் கரடியை அடைத்து வைத்துவிட்டனர். தூங்கும் நேரம் தவிர்த்து, கூண்டிலிருந்து வெளியே வருவதற்காகக் கம்பியை எப்பொழுதும் கடித்தபடியே இருக்கும் டோர்லே. இதனால் கரடியின் பற்களும் ஈறுகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அனிமல்ஸ் ஏசியாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் டோர்லேவை மீட்டு, தங்கள் சரணாலயத்துக்கு அழைத்துவந்தனர். சிகிச்சையளித்து, இயற்கையான சூழலில் வசிக்கவிட்டனர். அதற்குப் பிறகு டோர்லேவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து, 10 வயதில் முழுப் பார்வையையும் இழந்துவிட்டது. “பார்வை முற்றிலும் இழந்தாலும் டோர்லே அதற்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. பார்க்கும் திறன் குறைந்து வரும்போதே, மற்ற புலன்களை அதிகம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்த டோர்லே, பார்வையிழந்த பிறகு ‘டிராமா ராணி’ என்று பெயர் வாங்கிவிட்டது. எதையும் பார்க்க இயலாததால், அதைச் சரிகட்டும் விதத்தில் அடிக்கடி உரக்கக் குரல் கொடுக்கும். அழ ஆரம்பித்துவிடும். அருகில் சென்று குரல் கொடுத்தால் அமைதியாகிவிடும். காட்டில் உள்ள மூங்கில்களை உடைத்து விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பிறந்ததிலிருந்து டோர்லே மிகக் குறைவாகவே மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறது. அதனால் டோர்லேவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் நாங்கள் தனிக்கவனம் செலுத்திவருகிறோம். மீதி இருக்கும் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழிக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்கிறார் அனிமல்ஸ் ஏசியா அதிகாரி க்வைன்.