மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்
திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா? எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் முடியாது என்பதே விடையாக இருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான். மாத ஊதியம் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் மருத்துவக் காப்பீடு பெறலாம்.
தவறான சிந்தனை
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்குமே? எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் பணம் கிடைப்பது இல்லையே? மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் சேமிப்பிலிருந்து செலவுசெய்து கொள்ளலாமே எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான சிந்தனை.
மருத்துவக் காப்பீடு எடுக்காமல் தவறான கருத்து உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரபல சொற்றொடர் உள்ளது: “”உங்களுக்கு தேவைப்படாத நிலையில் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுங்கள்–ஏனெனில் உங்களுக்கு தேவைப்படும்போது உடனடியாக மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலன் அடைய முடியாது”.
மருத்துவக் காப்பீடு வைத்துள்ளோரின் கவனத்துக்கு…
நாம்தான் மருத்துவக் காப்பீட்டை எடுத்து விட்டோமே-மருத்துவச் செலவு ஏற்பட்டால் கவலை இல்லை என அது குறித்து அக்கறை செலுத்தாமல் இருப்பது நல்லது அல்ல. மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்தவுடன், ஆண்டுதோறும் கெடு தேதிக்கு சில நாள்கள் முன்பு அதை புதுப்பிப்பது, மருத்துவக் காப்பீட்டுக்கு உரிய அடையாள அட்டையைப் பராமரிப்பது, மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே பாலமாகச் செயல்படும் டிபிஏ எனப்படும் நிறுவனத்தின் (தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்) தொலைபேசி எண், அதன் அமைவிடம் குறித்த தகவல்களைப் பராமரிப்பது போன்ற திட்டமிடல்களும் அவசியம்.
பிரீமியம் தொகையைச் செலுத்த…
மாத ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியின் ஓராண்டு தொடர் வைப்பு திட்டத்தில் (ரிகரிங் டெபாசிட்) செலுத்தி வந்தால், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை கஷ்டமின்றி செலுத்த முடியும். ஒவ்வோர் ஆண்டும் குறித்த கெடு தேதிக்குள் காப்பீட்டைப் புதுப்பிப்பதை தவறாமல் செய்துவிட வேண்டும்.
ஆயுள் காப்பீடு போல, மருத்துவக் காப்பீட்டில் கெடு தீர்ந்த பிறகு பிரீமியம் செலுத்த நீண்ட கால அவகாசம் கிடையாது. கெடு தேதிக்குப் பிறகு பிரீமியம் தொகையைச் செலுத்த ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்வது அவசியம். அந்த ஒரு வாரத்துக்குள்ளாவது பாலிசியை புதுப்பிக்கத் தவறினால் பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும். செல்போன், கடிதம் மூலம் உங்களுக்கு நினைவூட்டல் தவறாமல் கிடைக்கும்படி காப்பீட்டு நிறுவனத்துடன் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
காப்பீட்டுத் தொகையின் முக்கியத்துவம்
எல்ஐசி ஆயுள் காப்பீட்டு பாலிசியைப் போன்றே மருத்துவக் காப்பீட்டிலும் காப்பீட்டுத் தொகையின் வரம்புக்கு ஏற்ப பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்படும்.
எனினும் மருத்துவச் செலவு ஏற்படும் நிலையில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை வரம்புக்கு ஏற்பவே காப்பீட்டு நிறுவனம் திரும்ப அளிக்கும் தொகை நிர்ணயிக்கப்படும்.
உதாரணமாக ஒரு பாலிசிதாரர் ரூ.2 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால், சிகிச்சை பெறும் மருத்துவமனையின் படுக்கை வசதி கட்டணமாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.2,000 (காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் மட்டும்) மட்டுமே கோர முடியும். இந்தத் தொகைக்கு அதிகமாக படுக்கை வசதி கட்டணம் இருந்தால், அந்தக் கூடுதல் செலவை பாலிசிதாரர்தான் ஏற்க வேண்டியிருக்கும்.
காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க…
தங்களது வருமானத்துக்கு ஏற்ப ஒருவர் மருத்துவக் காப்பீட்டுத் தொகையைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும். மேலும் மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டை கோராத ஆண்டுகளில், மருத்துவக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் நிலையில், காப்பீட்டுத் தொகையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது நல்லது. இவ்வாறு செய்யும் நிலையில் வயது அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி திடீர் மருத்துவச் செலவு ஏற்படும் நிலையில் எளிதாகச் சமாளித்துவிடலாம்.
செலவு செய்த பணத்தை திரும்பக் கோர…
மருத்துவக் காப்பீட்டைப் பொருத்தவரை, முன்தொகை செலுத்தாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, மருத்துவச் செலவு செய்து விட்டு செலவு செய்த பணத்தைத் திரும்பக் கோருவது என இரண்டு வகைகள் உள்ளன. பாலிசி எடுத்துள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் டிபிஏ நிறுவனத்தின் இணையதள முகவரியில் பாலிசிதாரர் சிகிச்சை பெற உள்ள மருத்துவமனை இணைப்புப் பெற்றிருந்தால் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம். இந்தத் தகவலை நோயாளியை அனுமதிப்பதற்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். டிபிஏ நிறுவனத்தின் இணைப்புப் பெறாத மருத்துவமனையாக இருந்தால் சிகிச்சைக்கு செய்த செலவை வீடு திரும்பிய 15 நாள்களுக்குள் டிபிஏ நிறுவனத்தின் உரிய படிவத்தில் விண்ணப்பித்துப் பெற முடியும்.
எனவே மருத்துவக் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உழைத்துச் சம்பாதித்து, சேமித்து வைத்த பெரும் தொகை முழுவதையும் இழக்காமல் இருப்பதற்கு மருத்துவக் காப்பீடு நிச்சயம் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நினைவில் கொள்ள வேண்டியவை…
மருத்துவக் காப்பீட்டு ஆவணங்களை (தொடர் ஆண்டு ஆவணம்) ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டில் உள்ளோருக்கு தெரியும் வகையில் பராமரிப்பது அவசியம். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் வீட்டில் உள்ளோர் உடனடியாக அதை எடுத்து உதவி பெற முடியும்.
மருத்துவச் செலவைத் திரும்பக் கோரும் நிலையில் நடப்பு பாலிசியின் நகலுடன் கடந்த மூன்று ஆண்டுகளின் பாலிசியின் நகலையும் இணைப்பது அவசியம். எனவே, முந்தைய ஆண்டுகளின் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளைப் பராமரிப்பது அவசியம்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டு புற நோயாளியாக டாக்டரிடம் சிகிச்சை பெறத் தொடங்கும் நிலையிலேயே மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, அவரது கட்டண ரசீது, ரத்தப் பரிசோதனை-எக்ஸ்ரே உள்ளிட்ட அறிக்கைகள், மருந்துகள் வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை ஒரு தனி ஃபைலில் சேகரித்துக் கொண்டே வருவது நல்லது. ஏனெனில் உடல்நலக் குறைவு நீடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில், புற நோயாளியாக செய்த செலவுக்கும் மருத்துவக் காப்பீடு மூலம் தொகையைத் திரும்பக் கோர முடியும்.
மருத்துவக் காப்பீடு பாலிசிதாரர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேரும் நிலையில், அது புறநோயாளி சிகிச்சையாகக் கருதப்படும். எனினும் தொடர்ந்து உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் செய்த செலவுக்கான தொகையை காப்பீட்டு நிறுவனத்தில் கோர முடியும்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு, டாக்டரின் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மருந்துகள் வாங்குவதற்கு ஆன செலவை 30 நாள்கள் வரை (ஒரு மாதம்) வரை காப்பீட்டு நிறுவனத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பெறலாம். எனவே மருந்துகள் வாங்கும் டாக்டரின் பரிந்துரைச் சீட்டு, ரசீது ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம்.
மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.25,000 வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.30,000 வரை வரி விலக்கு பெறலாம்.
ஆரோக்கியமாக இருக்கும்போது மருத்துவக் காப்பீடு குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டால், திடீர் செலவு ஏற்படும்போது செலவு செய்த பணத்தை திரும்பக் கோருவதற்கு உதவியாக இருக்கும்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களான யுனைட்டெட் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகியவை, தனியார் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு சேவை தொடங்கிய பின்னரும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.