கருப்பை வாய் புற்றுநோய்: இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் பாதிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் 13 முதல் 24 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் என்று தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் தெரிவித்தார்.
ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம், தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் முன் பரிசோதனைக்காக இலவச மருத்துவ முகாம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முகாமில் 1000-க்கும் அதிகமான பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
முகாம் தொடக்க விழாவில் தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்புச் செயலாளர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் பேசியது:
இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.
நமது நாட்டில் ஆண்டுதோறும் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் 13 முதல் 24 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. 25 முதல் 40 வயதுவரை இருப்பவர்களுக்கு அதிகமாக இந்நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது.
75 சதவீதப் பெண்கள் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் வரும்முன் காப்போம் நடவடிக்கை, தடுப்பூசி எடுத்தல் ஆகியவற்றால், கருப்பை வாய் புற்றுநோய் இறப்பு எண்ணிக்கை குறைகிறது. ஆனால், இந்தியாவில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. போதிய விழிப்புணர்வு இருந்தால், முன்கூட்டியே இந்நோயைத் தடுக்க முடியும்