13 கோடி பேரின் காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் அமெரிக்க சுகாதார ஆணையத்தின் தலைவரானார் இந்திய பெண்
அமெரிக்க சுகாதார காப்பீட்டு ஆணையத்தின் தலைவராக இந்திய பெண் சீமா வர்மா பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் 2 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கூறும்போது, “அரசுக்கு சொந்தமான ‘சென்டர்ஸ் பார் மெடிகேர் அன்ட் மெடிகெய்டு சர்வீசஸ்’, 13 கோடி அமெரிக்கர்களின் சுகாதார காப்பீட்டு திட்டங்களை நிர்வகித்து வருகிறது. ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த அமைப்பின் தலைவராக இத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீமா வர்மாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். உலகிலேயே மிகவும் சிறந்த சுகாதார திட்டத்தை உருவாக்க அவர் உதவுவார் என்று நம்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து சீமா வர்மா கூறும்போது, “தனியார் துறையில் பணியாற்றி வந்த என்னை இந்தப் பதவியில் அமர்த்திய அதிபர் ட்ரம்புக்கு நன்றி. அமெரிக்கர்கள் அனைவருக்கும் தரமான, குறைவான செலவில் சுகாதார வசதிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக சீமா வர்மாவின் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் வர்மாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் பதிவாயின.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந் தார். எனவே, சுகாதார காப்பீட்டு திட்டத்தின் சீர்திருத்த நடவடிக்கை யில் சீமா முக்கிய பங்கு வகிப்பார் எனத் தெரிகிறது. இத்துறையில் இவர் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். குறிப்பாக பென்ஸ் ஆளுநராக இருந்த இண்டியானா மாகாணத்தில் சுகாதார சீர்திருத்த நடவடிக்கையில் சீமா முக்கிய பங்கு வகித்தார்.
டொனால்டு ட்ரம்ப் அதிபரானதும், இந்திய அமெரிக்க பெண்ணான நிக்கி ஹாலேவை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமித்தார். இப்போது, சீமா வர்மாவுக்கு முக்கிய பதவி வழங்கி உள்ளார். இதன்மூலம் இவரது நிர்வாகத்தில் 2 இந்தியர்கள் அதுவும் பெண்கள் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.