ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்தது
மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவைகளை தினசரி 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரெயில்களில் அலைமோதும் கூட்ட நெரிசல் காரணமாக ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய- மேற்கு ரெயில்வேக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதன்படி மத்திய ரெயில்வே துறைமுக வழித்தடத்தில் இயக்கப்பட்ட 9 பெட்டி மின்சார ரெயில் சேவைகள் அனைத்தையும் 12 பெட்டி சேவைகளாக மாற்றியது.
மேலும் கடந்த ஆண்டு மெயின் வழித்தடத்தில் தானே- குர்லா மற்றும் துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.டி.- பன்வெல் இடையே தலா 11 புதிய மின்சார ரெயில் சேவைகளையும், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் 22 சேவைகளையும் அறிமுகப்படுத்தியது.
உயிரிழப்பு குறைந்தது
இதேபோல 8 மின்சார ரெயில்களில் அதிக பயணிகள் நின்று கொண்டு பயணிப்பதற்கு வசதியாக இருக்கைகளை அகற்றி ரெயில் பெட்டிகளில் மாற்றம் செய்தது. மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் 10 சேவைகளை விரார் வரையிலும் நீட்டித்தது. 15 பெட்டி ரெயில் சேவையையும் அதிகரித்தது.
ரெயில்வேக்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் 20 சதவீதம் வரையிலும் குறைந்து உள்ளதாக ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெயில்வே வழித்தடத்தில் அந்தேரி- விரார் இடையே கடந்த 2015-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 156 பேர் பலியானார்கள். ஆனால் கடந்த ஆண்டு பலியானவர்கள் எண்ணிக்கை 133. மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் 2015-ல் 395 பேர் தவறி விழுந்து உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 308 பேர் பலியாகி உள்ளனர்.