ஜிஎஸ்டி.,யால் டீ, காபி விலை உயரும்
துரித உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி மற்றும் இதர வகை உணவு பொருட்களும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுவதால், அவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
டீ, காபி விலை உயரும் :
வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளது. எந்தெந்த பொருள்களுக்கு எந்த வகையில் வரி விதிப்பு இருக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி. குழு கூடி ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ளது.
இதில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கூட்டுவரி விதிக்கப்படுகிறது. இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் துரித உணவகங்களும் கொண்டு வரப்படுகின்றன. இங்கு தற்போது உணவு பொருள்களுக்கு 4 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இனி இவற்றுக்கு ஒட்டுமொத்த வியாபாரத்தின் அடிப்படையில் கூட்டு வரி விதிக்கப்படும்.
இதனால் துரித உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி மற்றும் இதர வகை உணவு பொருட்களுக்கும் சேவை வரி வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.