காலடி அழுத்தம் மூலம் மின் உற்பத்தி கிட் அன்ட் கிம் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
மனிதனின் காலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை, காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கும், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத தொழில் நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் பராமரிப்பு செலவு இதற்கு தடையாக உள்ளது. இதனை ஈடு செய்ய மனிதனின் காலடி அழுத்தம் மூலம் “பியோசோ எலக்ட்ரிக் சென்சார்’ எனும் சாதனத்தை பயன்படுத்தி எளிதான முறையில், குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கிட் அன்ட் கிம் கல்லுாரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.
பி.இ., இறுதியாண்டு மாணவர்கள் நிருபன்குணா, நரேந்திரன் கூறும்போது: “பியாசோ எலக்ட்ரிக் சென்சார்’ என்பது இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் தன்மை கொண்டது. எங்களது கருவியில் நான்கு சென்சார்களை ஒரு சதுர அடியில் பொருத்தியுள்ளோம். இதன் மேல் அழுத்தம் கொடுக்கும்போது, ஒவ்வொரு சென்சாருக்கும் 5 வோல்ட் வீதம் 20 வோல்ட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
இந்த மின்சாரத்தை மின்கலத்தில் சேமித்து, அதன் வெளியீட்டில் தானியங்கி போக்குவரத்து ஒளி கட்டுப்பாட்டு அமைப்பை இணைத்து, வாகனங்களின் நெரிசலுக்கு ஏற்றவாறு சிக்னல்களை செயல்படுத்தலாம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும், என்றனர். மாணவர்களை கல்லுாரிகளில் குழும தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன்,ஆசிரியர்கள் பாராட்டினர்.