மது விற்பனைக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்
மது விற்பனை மீது, கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம், சட்டசபையில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
வணிக வரித்துறை அமைச்சர், கே.சி.வீரமணி, நேற்று தாக்கல் செய்த மசோதா: குஜராத், உ.பி., உள்ளிட்ட பிற மாநிலங்களில், மதிப்புக் கூட்டு வரி சட்டங்களில், பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்க வழி உள்ளது. ஆனால், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தில், பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்க வகைமுறை இல்லை.
எனவே, மாநில வருவாயை பெருக்க, அனைத்து மதுபானங்களின் விற்பனையில், வரி விதிக்கத்தக்க விற்றுமுதல் மீது, ஐந்து சதவீதத்திற்கு மிகாமல், கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் விதமாக, 2016 ஏப்., 1 முதல் முன் தேதியிட்டு, சட்டத்திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளதுஇவ்வாறு சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, வணிகவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்த பின், எரிபொருள் மற்றும் மதுவகைகள் மீது மட்டும் தான், நாம் நேரடியாக வரி விதிக்க முடியும். அதனால், மதுவகை விற்றுமுதல் மீது, வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மசோதாவில், முன் தேதியிட்டு வரி வசூலிக்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டில் நடைபெற்ற விற்பனைக்கு, டாஸ்மாக் நிறுவனம், வரி செலுத்த வேண்டியிருக்கும். இது, வரி விதிப்பிற்கான மசோதா மட்டுமே. இந்த மசோதா நிறைவேறிய பின் தான்,
வரி விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதில், ‘பிராந்தி, விஸ்கி’ போன்றவற்றுக்கு தனியாகவும், ‘பீர்’ வகைகளுக்கு தனியாகவும் வரி விதிப்பு இருக்கும். கடந்த, 2006ல், ‘வாட்’ வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன், இந்த வரியை வசூலித்து வந்தோம். அது, மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.1,000 கோடி
டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதனால், இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால், ஓராண்டுக்கு குறைந்தது, 1,000 கோடி ரூபாய்க்கும் மேலாக, கூடுதல் வரியாக, டாஸ்மாக் செலுத்த வேண்டியிருக்கும். கடந்த ஓராண்டிற்கான, நிலுவைத் தொகையையும் தர வேண்டியிருக்கும். அதனால், மதுவகைகள் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மது விலை உயருமா?
தென் மாநிலங்களில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விதிப்பு, தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது என, மாநில அரசு கூறுகிறது. இந்நிலையில், மதுபானங்கள் மீது கூடுதல் வரியை விதிக்கும் நடவடிக்கையை, தென் மாநிலங்களில் தமிழகம் மட்டுமே, தற்போது மேற்கொண்டு உள்ளது.
இது குறித்து, நிதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு தான் வரி விதிப்பு செய்யப்பட்டு உள்ளது. வரி விதிப்பது பற்றியும், வரி விகிதம் பற்றியும், அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அது நிர்ணயிக்கப்பட்ட பின், விலையை உயர்த்தலாமா, வேண்டாமா என, டாஸ்மாக் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால், இப்போதைக்கு மது விலை உயராது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.