அதிபராக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் அடைந்து வரும் தொடர் பின்னடைவுகள்: ஓர் அலசல்
அதிபர் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பிறகு தனது திட்டங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.
ஒபாமா கேர் என்ற ஆரோக்கியம் குறித்த ஒரு பெரும் காப்பீட்டுத் திட்டத்தை ஒழித்து விடுவேன் என்ற சபதத்துடன் அவர் வெற்றி பெற்றார், அவர் வெற்றிக்கு இந்த அறிவிப்பும் பிரதான காரணம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன, இந்நிலையில் அவரது குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே ஒபாமா கேரை ஒழிக்க முடியாமல் செய்து விட்டனர்.
2 மாத கால ஆட்சியில் அவர் அடைந்த பின்னடைவுகள் வருமாறு:
முஸ்லிம் பயணிகள், அகதிகள் தடை விவகாரம்:
7 முக்கியமான முஸ்லிம் நாடுகளிலிருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தடை விதித்து செயல் உத்தரவு பிறப்பித்தார் ட்ரம்ப். முன் எச்சரிக்கை இல்லாது அறிவித்ததனால் ஆங்காங்கே பலரும் விமான நிலையங்களில் அதிகாரிகளிடத்தில் கடுமையைச் சந்தித்தனர், பெரும்குழப்பம் ஏற்பட்டது. உலகம் முழுதும் ட்ரம்புக்கு எதிரான கருத்துகள் உக்கிரமடைந்தன.
இதை விட கொடுமையாக அதிபரின் உத்தரவுக்கு வாஷிங்டன் கோர்ட் தடை விதித்தது, அதாவது மத ரீதியாக பாகுபாடு பார்ப்பது அமெரிக்க அரசியல் சட்டமைப்புக்கு விரோதமானது என்று கூறி ட்ரம்ப் தடைக்கு தடை விதித்தது. ட்ரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்தனர், ஆனால் அதிலும் தோல்வி, மீண்டும் சிர்திருத்தப்பட்ட முஸ்லிம் பயணிகள், அகதிகள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் இதையும் கோர்ட் தோற்கடித்தது. இரண்டாவது திருத்தப்பட்ட உத்தரவும் முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சமான உத்தரவாகவே பார்க்கப்பட்டது.
ரஷ்யா..
அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பக்கம் சாதகமாகத் திரும்பியதற்கு ரஷ்யாவே காரணம் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றம்சாட்டின. ரஷ்யாவின் பங்கு குறித்து குறைந்தது 4 விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மின்னஞ்சல்களை ஹேக் செய்து தகவல்களைக் கசியவிட்டது ட்ரம்புக்குச் சாதகமாக அமைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் ரஷ்ய தூதர் செர்ஜி கிஸ்லியாக் என்பவரை அவர் பொறுப்பு எடுத்துக் கொள்வதற்கு முன்னால் சந்தித்தார் என்றும் இது தொடர்பாக அவர் வெள்ளை மாளிகையை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றார் என்றும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பிளின் ராஜினாமா செய்தார். இது ட்ரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ரஷ்யா தொடர்பான விசாரணைகளிலிருந்து அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் தன்னை விடுவித்துக் கொண்டார். காரணம் இவரும் ரஷ்ய தூதரைச் சந்தித்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டதே.
இந்நிலையில் திங்களன்று பொது விசாரணை நடைபெற்ற போது எஃப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமி, ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தன் செல்வாக்கைச் செலுத்த உதவியதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக அறிவித்தார். அதாவது ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரம் ரஷ்யா ஹேக் செய்து வெளியிட்ட ஜனநாயகக் கட்சிப் பற்றிய தகவல்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். மேலும் பராக் ஒபாமா தனது பேச்சுகளை ஒட்டுக் கேட்டார் என்ற குற்றச்சாட்டையும் எஃப்.பி.ஐ. இயக்குநர் ஏற்கவில்லை.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் ட்ரம்ப் வசமாகச் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது. நாடாளுமன்றம், செனட் புலனாய்வு கமிட்டிக்கள் மேலும் சில பொது விசாரணைகளை வரும் வாரங்களில் மேற்கொள்ளவிருக்கிறது.
ஒபாமா கேர் விவகாரம்:
இந்நிலையில் முன்னாள் அதிபர் ஒபாமா உருவாக்கிய ஒபாமா கேர் துன்பங்களிலிருந்து மக்களை விடுவிப்பேன் என்ற உறுதி மொழியுடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிய ட்ரம்ப், குடியரசு ஹெல்த் கேர் என்பதை முன் மொழிந்தார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிய அவர் குடியரசு ஹெல்த் கேர் திட்டத்தை வாபஸ் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
காப்பீட்டுத் துறையை சுதந்திர சந்தைப் போட்டிக்குக் கொண்டு வரும் முயற்சியை ட்ரம்ப் மேற்கொண்டார். அமெரிக்கர்களுக்கு பிரிமியம் தொகைச் செலவை குறைப்பது என்று திட்டமிட்டார், ஆனால் இதனால் வேலை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து ஹெல்த் கவரேஜ் இல்லாமல் போய் விடும் அடுத்த ஆண்டில் சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் தங்கள் காப்பீட்டை இழப்பார்கள் என்று கணிப்புகள் வெளியாக ட்ரம்பின் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
பில்லியனர், ரியல் எஸ்டேட் ஜாம்பவான் முதலாளியான ட்ரம்ப் வெள்ளைமாளிகையில் எந்த ஒரு அரசியல் அனுபவமோ அரசு நிர்வாக அனுபவமோ இல்லாது அதிபராகியுள்ளார். தற்போது இவரது ஹெல்த் கேர் மசோதா இறந்து விட்டது என்றே கூற வேண்டும்.
அடுத்ததாக வரிச் சீர்த்திருத்தம் என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப், இதுவும் குடியரசுக்கட்சியின் நீண்ட கால லட்சியம், ஆனால் இதிலும் சொதப்பி ட்ரம்ப் தோல்வியடையாமல் இருக்க குழு ஒன்றே அவருக்காக பணியாற்றி வருகிறது.