பாகிஸ்தான் மாணவியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட வதந்தி
“அந்த பல்கலைக்கழகம் என்னுடைய கனவுகளை கலைத்துவிட்டது; அதற்காக அது என்னிடம் மன்னிப்பு கோரவில்லை, சமூகத்தில் எனது மரியாதைக்கும் பெயருக்கும் அந்த பல்கலைக்கழகம் விளைவித்த களங்கத்தை பணத்தை கொண்டு சரி செய்ய முடியாது” என்று கூறுகிறார் வஜ்ஹா அரூஜ்.
தற்போது 38 வயதாகும் அரூஜ், அன்று ஆங்கிலத்தில் தனது முதுநிலை படிப்பை லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கொண்டிருந்த அச்சமயம் ஆரம்பத்தில் ஒரு சிறிய தவறாக அது தொடங்கியது.
அந்த பல்கலைக்கழகம், ஒரு தேர்வுக்கு அவர் வரவில்லை என்றும் அதனால் அவர் தோல்வி அடைந்தார் என்றும் தெரிவித்தது.
பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அப்போது அரூஜின் தந்தையிடம், அரூஜின் “நடவடிக்கைகள்” குறித்து கேள்வி எழுப்பினார். அவர் தேர்வு நாளன்று எங்கிருக்கிருந்தார் என்று தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் கட்டுப்பாடு மிகுந்த சமுதாயத்தில், ஒரு பெண்ணிற்கு இது ஓர் அபாயகரமான சூழலாக இருந்தது. பெண்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள். ஆண்களுடன் பழகுவது ஏற்றுக் கொள்ளப்படவில்லை, அவர்கள் ஆண் துணையுடன்தான் வெளியே செல்ல வேண்டும். எனவே அரூஜ் ஓர் ஆணுடன் வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்தன.
அரூஜ் தேர்வுக்கு வரவில்லை என்று கூறப்பட்ட செய்தி அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்குச் சென்றடைந்தது.
“எனது அம்மாவும் என்னை சந்தேகத்துடன் பார்த்தார், எனது உறவினர்கள் நான் ஏன் தேர்வுக்கு செல்லவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்கினர்” என தெரிவித்தார்.
அவர் தேர்வுக்கு வரவில்லை என்ற வதந்தி வெகுவாக பரவ ஆரம்பித்தது; எனவே அவரின் உடன் பயில்பவர்களிடம் பேச கடினமாக இருந்ததாகவும் அவர்கள் அவரை கேலி செய்ததாகவும் அரூஜ் தெரிவித்தார்.
“வகுப்பறையில் இந்த வதந்தியை பற்றி பேசுவார்கள், மேலும் தேர்வு என்று சொல்லி யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லாம் என்று என்னை பரிகாசம் செய்வதோடு அதை என் காதில் விழும்படியாகத்தான் பேசி, கேலி செய்வார்கள்” என்று தெரிவிக்கிறார் அரூஜ்
உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் ஏற்கனவே அரூஜ் மாலை வகுப்பிற்கு செல்வது குறித்து ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இந்த வதந்தி பரவியதையடுத்து, வருடம் முழுவதும் வகுப்பை புறக்கணித்து வேறு இடங்களுக்கு அரூஜ் செல்வதாக அவர்கள் சந்தேகித்தனர்
ஒரு தருணத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றியது” என்று தெரிவிக்கிறார் அரூஜ்.
5 வயது மகனை தாயிடம் சேர்த்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி
எனவே பல்கலைக்கழகத்திற்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் குடும்பம் அவருக்கு முழு ஆதரவளித்தது மேலும் அவரின் தந்தை ஓய்வு பெற்ற நீதிபதியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு பல்கலைக்கழக அதிகாரிகள் அரூஜின் தேர்வுத் தாளை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதாவது, எந்தத் தேர்வுக்கு அவர் வரவே இல்லை என்று கூறினார்களோ, அதே தேர்வுத்தாளை, சமர்பிப்தார்கள். மேலும் அந்த தவறுக்கு, ஊழியர் ஒருவர் வருகையை சரியாக சரிபார்க்க தவறியதே காரணம் என தெரிவித்தனர்.
பிறகு அந்த நீதிமன்றம் தனது தவறை திருத்திக் கொண்டு புதிய தேர்வு முடிவை வெளியிட்டது, பல்கலைக்கழகம் கவனக் குறைவாக செயல்பட்டுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தவறால் ஏற்கனவே பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது. “என்னை சுற்றியுள்ள நபர்களிடம் நான் பெற்றிருந்த மரியாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம்” என அரூஜ் தெரிவித்தார். மேலும் தனது பெயரை களங்கப்படுத்தியதற்காக இழப்பீடு கோரி பல்கலைக்கழத்தின் மீது வழக்கு தொடுத்தார்.
வெளிநாட்டிற்கு பயணம்
இதனிடையே அரூஜின் எதிர்காலம் குறித்து அஞ்சிய அவரின் பெற்றோர் அவருக்கு விரைவில் திருமணம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அரூஜின் குடும்பத்தினர் மிகவும் முற்போக்குதனமாக இருந்ததாகவும், ஆனால் அவரை சுற்றியிருந்த சமுதாயம் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாக இருந்ததாகவும் அரூஜ் தெரிவித்தார்.
இறுதி தேர்வை முடித்த நான்கு மாதத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
“நான் விரைவில் திருமணம் செய்து கொண்டால் பல்கலைக்கழகத்திற்குச் சென்று சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது என்று எனது பெற்றோர்கள் கருதினர்” என தெரிவிக்கிறார் அரூஜ்.
ஆனால் திருமணம் செய்து கொண்டால் பாகிஸ்தானின் குடிமுறை அரசுப் பணியில் சேரும் அவரின் லட்சியத்தை நிறைவேற்ற முடியாது என்று அவருக்கு தெரிந்தது.
அரூஜின் இரண்டு சகோதரிகளும் நன்றாக படித்தனர்; அதில் ஒரு சகோதரி நீதித்துறை அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.
திருமணம் முடிந்த சில வருடங்களுக்கு பிறகு அரூஜ், அவரின் கணவர் மற்றும் சிறு பெண் குழந்தையுடன் கனடாவிற்குச் சென்றார். பின் அங்கு அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அங்கு அவரால் தனக்கென்று ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணைகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டன.
தனது மகளின் வழக்கை எதிர்த்து பல்கலைக்கழகம் தொடர்ந்து மேல் முறையீடு செய்து கொண்டிருந்தது என தெரிவித்தார் அரூஜின் தந்தை சகீர் முகமத்.
இந்த வழக்கில், வாதிடுவதற்கு ஐந்து வருடங்களையும் தங்களுக்கு ஆதரவான ஆதாரங்களை சேகரிக்க மீதி வருடங்களையும் எடுத்துக் கொண்டனர் என முகமத் தெரிவிக்கிறார்.
கடந்த வருடம் லாகூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்று அரூஜிற்கு அந்த பல்கலைக்கழகம் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்புபடி 8 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்தது; ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால் இப்பொழுதும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அந்த பல்கலைக்கழகத்திற்கு உரிமை உள்ளது.
பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தினத்திற்கு தடை
இது நீண்ட காலம் நடைபெற்ற வழக்கு என்பதால் முதலில் வழக்கின் விரிவான தீர்ப்பை பார்க்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் குர்ரும் ஷெசத் தெரிவித்தார்.
அந்த மாணவியின் தரப்பு சரியாக இருந்தால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம். ஆனால் பல்கலைக்கழகத்தின் பக்கம் நியாயம் இருந்தால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.
`வெற்றி`
பாகிஸ்தான் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும் சில தடைகள் நீடிக்கத்தான் செய்கின்றன என்று இஸ்லாமாபாத்தில் உள்ள காயித் இ அசாம் பல்கலைக்கழகத்தில் பாலின படிப்புகளின் இயக்குநர் மற்றும் பாகிஸ்தானில் புகழ்பெற்ற ஆர்வலரான ஃபர்சனா பரி, பிபிசியிடம் தெரிவித்தார்.
“இன்றளவும் இம்மதிரியான ஒரு சூழலை ஒரு பெண் சந்தித்தால் இதே மாதிரியான வதந்தியையும், நெருக்கடியையும் தான் சமூகத்தில் எதிர் கொள்ள நேரிடும்” என்று தெரிவிக்கிறார் ஃபர்சனா பரி.
நீண்ட நாட்களாக அரூஜ் சட்டரீதியாக போராடியது தனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனென்றால் பொதுவாக பலர் நீதித்துறை மீது நம்பிக்கை இல்லாமல் பாதியில் விட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அரூஜ் இந்த வழக்கில் வெற்றி பெற்றதற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
“நான் தவறு செய்யவில்லை என்று பல்கலைக்கழகம் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். எனவே இதை நான் எனக்கு கிடைத்த வெற்றியாகத்தான் கருதுகிறேன்” என்று தெரிவிக்கிறார் அரூஜ்.