லாரிகள் வேலைநிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து முடக்கம்: தமிழக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதால் சரக்குப் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனிடையே, தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் லாரி உரிமையாளர் சம்மேளன பிரதிநிதிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் வேலைநிறுத்தம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு சமீபத்தில் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) உயர்த்தியது. வாகன காப்பீட்டுக்கான பிரீமிய கட்ட ணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங் களில் பல்வேறு சேவைகளுக் கான கட்டணங்களும் உயர்த்தப்பட் டுள்ளன. வரி மற்றும் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி, தமிழக அரசுக்கு லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், கட்டண உயர்வு வாபஸ் பெறப்படவில்லை. எனவே, தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு, மணல் லாரிகள் வேலைநிறுத்தத் தால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், லாரி உரிமை யாளர் சங்கத்தினர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாததால், வேலைநிறுத்தம் தொடரும் என உரிமையாளர்கள் அறிவித்தனர். இது தொடர்பாக, லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறிய தாவது:
டீசல் மீதான வாட் வரி உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், எங்கள் கோரிக்கைள் மீது உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆலோசனை நடத்திய பின்னரே கோரிக்கைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் தெரிவித் தார். தற்போதைய சூழலில் கால அவகாசம் அளிக்க முடியாது என அமைச்சரிடம் நாங்கள் தெரிவித் தோம். 6 மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இணைந்து நடத்தும் போராட்டத்தை, எந்த காலஅவகாசத்தையும் அளித்து ஒத்திவைக்க முடியாது எனக் கூறினோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என தெரிவித்துள்ளோம்.
போராட்டம் காரணமாக, தென் மாநிலங்களில் சரக்கு போக்கு வரத்து முழுமையாக பாதிக்கும். இதனால், அத்தியாவசிய பொருட் களின் விலைகள் உயரும் நிலை ஏற்படும். தமிழகத்தில் மட்டும் தினசரி 1500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும். தமிழக அரசு அழைத்தால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற் போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விலைவாசி உயரும் அபாயம்
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று காலை 6 மணி முதல் தொடங்கியது. வேலை நிறுத்தத்தில் 6 மாநிலங்களைச் சேர்ந்த லாரிகள், மணல் லாரிகள், மினி லாரிகள் உள்ளிட்ட 30 லட்சம் வாகனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் 4.50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரூ.6,000 கோடி மதிப் புக்கு சரக்குகள் தேக்கமடைந் துள்ளது. குறிப்பாக, காய்கறிகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ கத்துக்கு வரவேண்டிய பருப்பு வகைகள், பூண்டு, கட்டுமானப் பொருட்கள் தடைபட்டுள்ளதால், இவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
50 லட்சம் பேர் பாதிப்பு
மேலும், முட்டை, ஜவுளி, ஜவ்வரிசி உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியா ததால் அவை பல கோடி ரூபாய் அளவுக்கு தேக்கமடைந்துள்ளன. வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் லாரி சார்ந்த தொழிலில் ஈடுபட் டுள்ள 50 லட்சம் பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தம் மேலும் சில நாட்கள் தொடர்ந்தால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்துக்கு தென் னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், மினி லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளனம் உள்ளிட்ட வையும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, பெட்ரோல் டேங்கர் லாரிகளையும் இணைத்து, போராட் டத்தை தீவிரப்படுத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.