செம்மரக் கடத்தல் வழக்கில் நடிகை சங்கீதா கைது: 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
செம்மரக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், முன்னாள் நடிகை சங்கீதா சட்டர்ஜியை (26) ஆந்திர போலீஸார் கைது செய்தனர். அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்னூல், கடப்பா, நெல்லூர் உட்பட 6 மாவட்டங்களில் இருந்து செம்மரங்களைக் கடத்தி அவற்றை சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்று வந்தவர் லட்சுமண். ஏற்கெனவே திருமணமான இவர், செம்மரக் கடத்தல் தொடர்பாக அடிக்கடி கொல்கத்தாவுக்கு சென்றார். அப்போது ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சங்கீதா சட்டர்ஜியுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் லட்சுமண் ஆந்திர போலீஸாரால் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, லட்சுமணின் கடத்தல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளைக் கொல்கத்தாவிலிருந்தபடி சங்கீதா கவனித்து வந்துள்ளார்.
இதையடுத்து, சங்கீதா வீட்டில் ஆந்திர போலீஸார் கடந்த ஆண்டு சோதனை நடத்தியதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதில் செம்மரக் கடத்தல்காரர்களின் தொலைபேசி எண்கள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
போலி துப்பாக்கி உரிமங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதை யடுத்து சங்கீதாவும் கைது செய்யப்பட்டார். எனினும், அவருக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், சங்கீதாவுக்கு ஆந்திர நீதிமன்றம் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக கொல்கத்தாவில் முகாமிட்டிருந்த ஆந்திர போலீஸார், சங்கீதாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் சித்தூர் மாவட்டம் பாகாலா நீதிமன்ற நீதிபதி வீட்டில் சங்கீதாவை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி சித்தூர் துணை சிறையில் அடைக்கப்பட்டார். சங்கீதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆந்திர போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.