இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா கற்றாழையில்?
தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்