இரட்டை இலை சின்னம் யாருக்கு? கையெழுத்து வேட்டை மீண்டும் துவக்கம்
இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் மீண்டும் கையெழுத்து வேட்டை நடத்தி, தேர்தல் கமிஷனிடம், பிரமாண பத்திரங்களை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணிகளாக, அ.தி.மு.க., பிரிந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, இரு அணி களுக்கும் தடை விதித்த தேர்தல் கமிஷன், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை யும் முடக்கியது. தற்போது, தேர்தல் கமிஷன், பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் அனுமதித்துள்ள
கட்சியின் பெயர்களும், சின்னங்களும், ஆர்.கே. நகரில் நடக்கும் இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும். தேர்தல் முடிந்து, ஏப்., 17ல், இரட்டை இலை சின்னம் குறித்து, கமிஷன் விசாரணை நடத்தும் போது, சின்னம், எந்த அணிக்கு ஒதுக்கப்படும் என்பது தெரிய வரும்.
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, கட்சியின ரின் கையெழுத்துகளை பிரமாண பத்திரங்களில் மீண்டும் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம்,இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் கமிஷனிடம், இரட்டை இலை சின்னம் கேட்டு, பன்னீர்செல்வம் அணியில், 6,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அதில், 43 லட்சம் அ.தி.மு.க., உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சசிகலா அணியில் இருந்து, 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும், 122 எம்.எல்.ஏ.,க்கள்; 37 எம்.பி.,க்களின் ஆதரவும் இருப்பதாக, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு கோடி உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் எடுத்த முடிவின் படி, 385 ஒன்றிய செயலர் கள், 135 நகராட்சி செயலர், 577 பேரூராட்சி செயலர் கள், 85 ஆயிரம் கிளை செயலர்கள் கீழ் பணியாற் றும் நிர்வாகிகளிடம், பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று, தேர்தல் கமிஷனில்,ஏப்., 14ல் ஒப்படைக்கு மாறு, தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதே போல, பன்னீர் செல்வம் அணியினரும், ஒரு கோடி தொண்டர் களின் கையெழுத்தை, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே பெறப்பட்டுள்ள, 43 லட்சம் பேரின் கையெழுத்து போக, மீதமுள்ள, 60 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களை பெற்று, தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்படும் என, தெரிகிறது. இவ்வாறு, இரு அணிகளும் கட்சியினரிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, பிரமாண பத்திரங்களை, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த பின், இரட்டை இலை யாருக்கு என்பது தெரிய வரும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன