டெல்லியில் தமிழக விவசாயிகள் மொட்டையடித்துப் போராட்டம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டு போராடினர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தெனிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தீவிர போராட்டம் நடைபெறுகிறது.
வறட்சி நிவாரணம், வங்கிகடன் ரத்து உட்படப் பல்வேறு கோரிக்கைகளுடன் நடைபெற்று வரும் போராட்டத்தினை அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு முன்னிருந்து நடத்தி வருகிறார்.
இதில், தமிழகத்தின் மற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் மாணவர்கள் உட்படப் பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் ஜந்தர் மந்தர் வந்திருந்து ஆதரவளித்து பேசி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பலரும் மொட்டையடித்துக் கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதி மொட்டையுடன் கோஷம்
விவசாயிகள் சிலர் பாதி மொட்டை அடித்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். “மத்திய அரசே! மத்திய அரசே! விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே!” என கோஷமிட்டனர்.
மாலை 5 மணிக்கு டெல்லியின் ராஜீவ் சோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கண்டன ஊர்வலம் நடத்த உள்ளனர். இதில், டெல்லிவாழ் தமிழர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி அய்யாகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வருடன் சந்திப்பு:
இதற்கிடையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் துணைத்தலைவர் தங்க சண்முகசுந்தரம் தனது குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்தர மோடியிடம் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்று முதல்வர் பழனிசாமியும் தம் கட்சி எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை துணை சபாநாயகரான எம்.தம்பிதுரையை மீண்டும் ஜந்தர் மந்தர் அனுப்பி விவசாயிகளுக்கு உதவ உறுதியளித்திருப்பதாக சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக ஆயிரம் விவசாயிகள் டெல்லி கிளம்பிச் செல்ல இருப்பதாகவும் அவர் தகவல் அளித்தார்.