இந்தியா பாட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டியில் சிந்து கரோலினா மரினுடன் பலப்ரீட்சை
இந்தியா பாட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் அவர் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்த்து விளையாடுகிறார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இந்தியாவின் சிந்து, 2-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சங் ஜி ஹயூனை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார்.
2-வது செட்டில் சங் ஜி ஹயூன் பதிலடி கொடுத்தார். இந்த செட்டை அவர் 21-14 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பானது. இதில் சிந்து துடிப்புடன் விளையாடினார். தொடக்கத்தில் அவர் 5-1 என முன்னிலை பெற்றார். எனினும் சங் ஜி ஹயூன் கடுமையாக போராடினார். அவர் 10-12 என நெருங்கி வந்தார்.
ஆனால் இதன் பின்னர் ஆக்ரோ ஷமாக விளையாடிய சிந்துவின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சங் ஜி ஹயூன் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். முடிவில் இந்த செட்டை சிந்து 21-14 என தனதாக்கினார்.
சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-18, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சிந்து, முதல் நிலை வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார்.
மரின் தனது அரை இறுதியில் 21-16, 21-14 என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 40 நிமிடங்களில் முடிவடைந்தது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒலிம்பிக் தோல்விக்கு சிந்து பதிலடி கொடுக்க முயற்சிக் கக்கூடும். இதுவரை இருவரும் 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் மரின் 5 முறையும், சிந்து 4 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.