தொடரும் லாரி ஸ்டிரைக் : உயர்கிறது காய்கறி விலை
தென்னிந்தியாவில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தி வரும் ஸ்டிரைக் தொடர்ந்து வருவதால் தமிழகத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் ஸ்டிரைக் :
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரி உயர்வு, வாகன இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் ஸ்டிரைக் இன்று (ஏப்ரல் 03) 4வது நாளாக தொடர்கிறது.கடந்த வாரம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. ஸ்டிரைக் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மீண்டும் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
விலை உயர்கிறது :
லாரி ஸ்டிரைக்கால் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேஸ் டேங்கர் லாரிகளும் இன்று ஸ்டிரைக்கில் பங்கேற்பதால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பால், தண்ணீர், மருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அந்த லாரிகள் மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.