பழைய மனை விற்பனை பத்திர பதிவுக்கு அனுமதி
‘பழைய வீட்டு மனைகளை விற்பனை செய்வதற்கான பத்திரங்களை, 2016 அக்., 20 அரசாணைக்கு உட்பட்டு, பதிவு செய்யலாம்’ என, பதிவுத்துறை தலைவர் ஆர்.செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு, 2016 செப்., 9ல், தடை விதித்தது. இந்த வழக்கு, மார்ச், 28ல், மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘2016 அக்., 20க்கு முன், வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் விற்பனையை மறுபதிவு செய்யலாம்’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மார்ச், 28ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நிதி ஆண்டின் இறுதி நாட்களில், ஏராளமானோர் விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, சார் — பதிவாளர் அலுவலகங்களை அணுகினர். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, பதிவுத்துறை தலைவரின் அறிவுறுத்தல் வரவில்லை என்று கூறி, சார் – பதிவாளர்கள் மறுத்தனர்.
இதுபற்றிய செய்தி, நமது நாளிதழில், மார்ச், 31ல் வெளியானது. இதையடுத்து, பதிவுத்துறை தலைவர் ஆர்.செல்வராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு: அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு தடை விதிக்கும் வகையில், பதிவு சட்டத்திருத்தத்தை அமல்படுத்த, 2016 அக்., 20ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளுக்கு முன், வீட்டுமனைகளாக பதிவு செய்யப்பட்ட வீடு, மனைகளை, சட்டத்திற்கு உட்பட்டு, பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் – பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால், இன்று முதல், பழைய வீட்டுமனைகள் விற்பனை பத்திரங்கள், சார் – பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும்.